

* நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே அமைந்துள்ளது, திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் திருக்கோவில். இக்கோவில் மூலவர் நீலமேகப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக இககோவில் போற்றப்படுகிறது.
இத்தல இறைவனை மனமுருக வழிபட்டால் கடன் தொல்லைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இங்குள்ள பெருமாள், பக்தர்களின் பாவங்களை தானமாக வாங்கிக்கொண்டு, சகல தோஷங்களையும் தீர்க்கும் வல்லமை படைத்தவர்.
* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது, திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவில். இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான், 'கடன் நிவர்த்தீஸ்வரர்' என்றும், ‘ஸ்ரீ ருண விமோசன லிங்கேஸ்வரர்' இத்தலத்தில் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
* சென்னை சைதாப்பேட்டையில் கடும்பாடி சின்னம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் கடும்பாடி சின்னம்மன், புற்று வடிவில் சுயம்புவாக தோன்றியவர். இவர் இப்பகுதி மக்களின் குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் உள்ளார். இக்கோவிலில், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, புற்றுக்கு முட்டை, பால் படைத்து வேண்டிக்கொண்டால் தீராத கடன் தொல்லைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
* திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் தாண்டிக்குடி பாலமுருகன் கோவில் உள்ளது. இங்குள்ள பைரவர் சன்னிதியில் தீபம் ஏற்றி வழிபட்டால் எதிரிகள் பயம் விலகுவதோடு, கடன் தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம் என்கிறார்கள் பக்தர்கள்.