

சோழவந்தான்,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 12 மணி முதல் நடைபெற்றது. சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து குழந்தை முதல் முதியவர்கள் வரை சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
முக்கியமாக குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்த பக்தர்கள், பிறந்த குழந்தையை கரும்புத் தொட்டிலில் கட்டி சோழவந்தான் வைகை ஆற்றில் இருந்து நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் நான்கு ரத வீதிகளில் உருண்டு கொடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினார்.
திருவிழாவை முன்னிட்டு சோழவந்தானில் பொதுமக்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். அன்னதானமும் வழங்கப்படுகிறது.
நாளை சோழவந்தான் மந்தை களத்தில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி (தீமிதி நிகழ்ச்சி) நடைபெற உள்ளது. காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருக்கும் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். ஜூன் 2-ம் தேதி தேரோட்டமும், 3-ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராஜா தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் ஜெனகை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
சோழவந்தான் பேரூராட்சி சார்பில் குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட ஏற்பாடுகளும், காவல்துறை சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளும், தீயணைப்பு துறை சார்பில் ஆங்காங்கே தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்களின் வசதிக்காக போக்குவரத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.