

புதுச்சேரி
அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், புதுச்சேரி மாவட்ட நிர்வாகத்தின் பேரிடர் மேலாண்மை குழுவுடன் இணைந்து பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படும் போது எவ்வாறு உயிர்காக்கும் தொழில் நுட்பங்களை கையாளுவது, பேரிடர் மீட்பு முறைகள் குறித்து பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் பேரிடர் காலங்களில் நிவாரண பணிகள் மேற்கொள்ள வருவாய்த்துறை அதிகாரிகளை தயார்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சிகள் உழவர்கரை சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தலைமை தாங்கினார்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கலந்துகொண்டு பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள், முதலுதவி சிகிச்சை தொடர்பாக செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் உழவர்கரை நகராட்சி வருவாய் அதிகாரி அய்யனார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.