

திருச்சி,
திருச்சியில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வந்தது. இந்த பஸ் நிலையம் அமைக்க திருச்சியில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் எந்த இடத்தில் பஸ் நிலையம் அமைப்பது பற்றி இறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திருச்சி கொட்டப்பட்டில் அமையும் என்று முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். திருச்சியில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்திற்கான திட்டங்களை அறிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி மாநகராட்சிக்கு ஒருங்கிணைந்த பஸ் நிலையம் விரைவில் அமைக்கப்படும். ஜெயலலிதா அறிவிப்பிற்கிணங்க திருச்சி மாநகராட்சி கொட்டப்பட்டு கிராமத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க கலந்தாலோசகர் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இத்திட்ட அறிக்கையினை தற்போது தொழில் நுட்ப மற்றும் நிதி மதிப்பீடு கூர்ந்தாய்வு செய்து உரிய வணிக முறையை முடிவு செய்து செயல்படுத்தப்படும்.
திருச்சி-சிதம்பரம் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் கல்லக்குடி தாப்பாய் சாலையிலுள்ள காட்டாற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்படும். ஏரகுடி மகாதேவி சாலையில் ஒரு பாலம், துலுக்கம்பட்டி சாலையில் ஒரு பாலம், தண்டலை திருத்தலையூர் சாலையில் ஒரு பாலம், சமயபுரம் கீழக்கண்ணுகுளம் (வழி) மண்ணச்சநல்லூர் திருப்பஞ்சீலி சாலையில் ஒரு பாலம், துவரங்குறிச்சி அடைக்கம்பட்டி சாலையில் ஒரு பாலம், இலுப்பூர் வளநாடு சாலையில் ஒரு பாலம், புடலாத்தி மாராடிகோட்டப்பாளையம் சாலையில் ஒரு பாலம் கட்டப்படும். கொப்பம்பட்டிவிஸ்வாம்பாள் சமுத்திரம் சாலையில் ஒரு பாலம், பைத்தம்பாறை சேருகுடி சாலையில் ஒரு பாலம், வாளவந்தி துலையாநத்தம் (வழி) மங்களம் சாலையில் ஒரு பாலம் கட்டப்படும்.
காட்டூர்-லால்குடி ரெயில் நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பாலம், சென்னை-திருச்சி வழித்தடத்தில் காட்டூர் மற்றும் லால்குடி ரெயில் நிலையங்களுக்கிடையே சாலை மேம்பாலம் கட்டப்படும். திருச்சி கீழ்கல்கண்டார்கோட்டை சாலையில், மஞ்சத்திடல் -திருவெறும்பூர் ரெயில் நிலையங்களுக்கிடையே சாலை மேம்பாலம் கட்டப்படும். ஸ்ரீரங்கம்- திருச்சி டவுன் ரெயில் நிலையங்களுக்கிடையே காவேரி சாலையில் சாலை மேம்பாலம் கட்டப்படும்.
துறையூர் நகரத்திற்கு இரண்டாம் கட்ட புறவழிச்சாலை அமைக்கப்படும். திருச்சி முதல் நாமக்கல் வரை 77 கிலோ மீட்டர் நீளமுள்ள (மாநில நெடுஞ்சாலை எண்.25) சாலையினை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த கொள்கை அளவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் 12.5.2017ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இச்சாலையினை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின் மீது தேசிய நெடுஞ்சாலை அலகு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மணப்பாறை தொகுதி, கோவில்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த பயணியர் விடுதி பழுது நீக்கி புதுப்பிக்கப்படும். கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் லால்குடி, முசிறி, மணப்பாறை, ஸ்ரீரங்கம் மற்றும் துறையூர் மருத்துவமனைகளில் மாரடைப்பு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முதலுதவி அளிக்க ஏதுவாக மாரடைப்பு சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்படும். கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்து எதிர் வீரிய காச நோய் வார்டு ஏற்படுத்தப்படும். திருச்சி நகரில் ஒரு புதிய மருந்து கிடங்கு அமைக்கப்படும். மணப்பாறை அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், ஆய்வக கருவிகள், டயாலிசிஸ் கருவி, எண்டோஸ்கோப் கருவி, புற்றுநோயாளி கீமோதெரபி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். மணப்பாறை வட்டத்தில் ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார சேவை திட்டம் செயல்படுத்தப்படும். இனாம்குளத்தூர் வட்டத்தில் கண் சிகிச்சை பிரிவு அமைக்கப்படும். நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பல் மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வெள்ளி கதாயுதத்தை நினைவு பரிசாக வழங்கினர். அதே போன்று ரத்தினவேல் எம்.பி. வெள்ளி செங்கோலை வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள ரூ.457 கோடியே 31 லட்சத்து 62 ஆயிரம் திட்ட மதிப்பீட்டிலான பணிகளுக்கு இவ்விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதில் திருச்சி மாநகராட்சி பகுதியில் மட்டும் ரூ.350 கோடியில் தார்ச் சாலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விழாவில் கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கே.சி.ரவிச்சந்திரன், துறையூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சேனை பெ.செல்வம், துறையூர் அரசு வக்கீல் மெய்யம்பட்டி ராஜசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வேங்கடத்தானூர் வெங்கடேசன், கலிங்கமுடையான்பட்டி முருகையா, கொட்டையூர் மாச்சான், துறையூர் நகர செயலாளர் செக்கர் ஜெயராமன், வேங்கடத்தானூர் கிளை செயலாளர்கள் வேங்கை முருகையா, தங்கராஜ், திருச்சி சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலை தலை வரும், மணப்பாறை ஒன்றிய செயலாளருமான எம்.பி.வெங்கடாசலம், மாவட்ட பொருளாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான எம்.செல்வராஜ், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் டி.ராஜாராம், லால்குடி ஒன்றிய செயலாளர் சூப்பர் என்கிற டி.என்.டி.நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.