ரூ.10 லட்சம் மதுபானத்தை திருடிய கலால் துறை அதிகாரிகள்; 5 பேர் பணி இடைநீக்கம்


ரூ.10 லட்சம் மதுபானத்தை திருடிய கலால் துறை அதிகாரிகள்; 5 பேர் பணி இடைநீக்கம்
x

பெலகாவியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபானத்தை திருடிய கலால் துறை அதிகாரிகள் 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பெலகாவி:

பெலகாவியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபானத்தை திருடிய கலால் துறை அதிகாரிகள் 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும் போலீசார், மற்றும் கலால் துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து செல்லும் பொருட்கள், ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் காரில் சட்டவிரோதமாக கடத்திய விலையுயர்ந்த மதுபானத்தை பறிமுதல் செய்த கலால் துறை அதிகாரிகள், அவற்றை திருடிய சம்பவம் பெலகாவியில் நடந்துள்ளது. பெலகாவி மாவட்டம் கானாபுரா தாலுகா மூடேகொப்பா கிராமம் அருகே கலால் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்ததில் அதில் ரூ.32 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த மதுபாட்டில்கள் இருந்தது.

ரூ.10 லட்சம் மதிப்பு

விசாரணையில், கோவாவில் இருந்து மதுபானங்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கலால் துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். ஒட்டுமொத்தமாக 753 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருந்த நிலையில், 452 மதுபாட்டில்களை மட்டுமே அதிகாரிகள் ஒப்படைத்தனர். மீதமுள்ள 301 பாட்டில்களை பறிமுதல் செய்த கலால் துறை அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து திருடியது தெரிந்தது. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து கலால் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பணி இடைநீக்கம்

விசாரணையில், கலால் துறை இன்ஸ்பெக்டர் தேவல்சாப் சிந்தோகி, சதாசிவா கோர்டி, சப்-இன்ஸ்பெக்டர் புஸ்பா கடகி உள்பட 5 பேர் கூட்டாக சேர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் பணி இடைநீக்கம் செய்து உயர் அதிகாரி உத்தரவிட்டார். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story