ஆடை வடிவமைப்பு உள்பட பல்வேறு துறைகள்... நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி வழங்கும் படிப்புகள் - முழு விவரம்

நாடு முழுவதும் 15 இடங்களில் இந்த பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது.
ஆடை வடிவமைப்பு உள்பட பல்வேறு துறைகள்... நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி வழங்கும் படிப்புகள் - முழு விவரம்
Published on

உலக அளவில் மாறிவரும் நாகரிக மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை புதுமைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளோடு, ஆடை வடிவமைப்பு மற்றும் நவீன ஆடைகள் உருவாக்குதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட நிறுவனம் "நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி" (NATIONAL INSTITUTE OF FASHION TECHNOLOGY)(NIFT) என்னும் கல்வி நிறுவனமாகும்.

அதிநவீன கற்றல் அனுபவத்தையும், பயிற்ச்சியையும் வழங்கி, தொழில் துறையில் மாபெரும் மாற்றத்தை உருவாக்க உதவும் வகையில்  இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்ப உடைகள், அணிகலன்கள் மற்றும் ஒப்பனைகளில் மக்கள் பின்பற்றும் நாகரீகமான பாணியை "பேஷன்" என அழைப்பார்கள். இந்த பேஷன் துறையில் முன்னேற வேண்டும் என ஆர்வம் கொண்ட அத்தனைபேர்களுக்கும் சிறந்த வழிகாட்டல் வழங்கும் நிறுவனமாக இந்த நிறுவனம் திகழ்கிறது. 

முதன் முதலில் இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனம் எனப்படும் NIFT, 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.  இன்று நாடு முழுவதும் 15 இடங்களில் இந்த பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. 

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாணவ, மாணவிகள் இந்த நிறுவனங்களில் சேர்ந்து தங்களது கல்வி அறிவையும் பயிற்சி திறனையும் மேம்படுத்திக் கொள்கிறார்கள். 

ஆடை வடிவமைப்பு ,மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பேஷன் சம்பந்தப்பட்ட கல்விக்கான பயிற்சிகளை இந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. சுதந்திரமான சிந்தனை மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகள் மூலம் மேம்படுத்தப்பட்ட கல்வியை மாணவ மாணவிகளுக்கு இந்த நிறுவனம் வழங்குகிறது  இதன்மூலம், உலக அரங்கில் மிகச்சிறந்த வல்லுனர்களாக இங்கு பயிற்சி பெற்றவர்கள் திகழும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. 

பல்வேறு படிப்புகள்

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி" (NATIONAL INSTITUTE OF FASHION TECHNOLOGY)(NIFT) என்னும் கல்வி நிறுவனத்தில் நடத்தப்படும் படிப்புகள் பற்றிய விபரம் வருமாறு;

இளநிலைப் படிப்புகள் (B.Des (4 ஆண்டுகள்)

1. B.Des -பேஷன் கம்யூனிகேஷன் (B.Des -Fashion Communication)

2. B.Des - அக்சஸரி டிசைன் (B.Des Accessory Design)

3. B.Des - பேஷன் டிசைன் (B.Des Fashion Design)

4. B.Des - நிட்வேர் டிசைன் (B.Des Knitwear Design)

5. B.Des - லெதர் டிசைன் (B.Des Leather Design)

6. B.Des - டெக்ஸ்டைல் ​​டிசைன் (B.Des Textile Design)

7. B.Des - பேஷன் இன்டீரியர்ஸ் (B.Des Fashion Interiors)

இளநிலைப் படிப்புகள் B.F.Tech (4 ஆண்டுகள்)

1. B.F.Tech - பேஷன் தொழில்நுட்பத்தில் இளநிலை (B.F.Tech Bachelor of Fashion Technology)

முதுநிலைப் படிப்புகள்

1. M.Des - டிசைனில் முதுநிலை (M.Des Master of Design)

2. MFM - பேஷன் நிர்வாகத்தில் முதுநிலை (MFM Master of Fashion Management)

3. M.F.Tech - பேஷன் தொழில்நுட்பத்தில் முதுநிலை (M.F.Tech Master of Fashion Technology)

ஆய்வுப் பட்டம்

1. Ph.D

B.Des பேஷன் டெக்னாலஜி

படிப்புக்கான கல்வி தகுதி.

B.Des எனப்படும் வடிவமைப்பு இளநிலை பட்டப்படிப்பில், துணைக் கருதி வடிவமைப்பு, பேஷன் தகவல் தொடர்பு, பேஷன் வடிவமைப்பு ,பேஷன் உட்புற வடிவமைப்பு, பின்னலாடை வடிவமைப்பு, தோல் வடிவமைப்பு, ஜவுளி வடிவமைப்பு ஆகிய பட்டப் படிப்புகளில் சேர……

1.பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

2.தேசிய திறந்த நிலை பள்ளி (NATIONAL OPEN SCHOOL) மூலம் நடத்தப்படும் ,"சீனியர் செகண்டரி ஸ்கூல் எக்ஸாமினேஷன் தேர்வில்"( SENIOR SECONDARY SCHOOL EXAMINATION,) குறைந்தபட்சம் 5 பாடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு.

இந்தப் படிப்புகளில் சேர விரும்புவர்களின் அதிகபட்ச வயது 24 ஆகும். SC மற்றும் ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்.

B.Tech பேஷன் டெக்னாலஜி

படிப்புக்கான கல்வி தகுதி.

1. பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

2. தேசிய திறந்த நிலை பள்ளி (NATIONAL OPEN SCHOOL) மூலம் நடத்தப்படும் ,"சீனியர் செகண்டரி ஸ்கூல் எக்ஸாமினேஷன் தேர்வில்"( SENIOR SECONDARY SCHOOL EXAMINATION,) குறைந்தபட்சம் 5 பாடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

3. எஸ். எஸ். எல் .சி எனப்படும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பின்பு, ஏ .ஐ .சி .டி (AICTE) அல்லது மாநில தொழில் நுட்ப கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் பிரிவில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் டிப்ளமோ எனப்படும் பட்டய படிப்பை முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு.

இந்தப் படிப்புகளில் சேர விரும்புவர்களின் அதிகபட்ச வயது 24 ஆகும். SC மற்றும் ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்.

முதுநிலை பட்டப்படிப்புகள்

முதுநிலை பட்டப்படிப்புகளான M.Des,M.F.M மற்றும் M.F.Tech ஆகிய பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு வயது வரம்பு ஏதுமில்லை.

இருப்பினும் இந்தப் படிப்புகளில் சேர்வதற்கான கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதிகள்.

1. M.Des மாஸ்டர் ஆப் டிசைன் (MASTER OF DESIGN).

1. பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை படித்தவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

அல்லது

2. NIFT அல்லது NID ஆகிய நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இளநிலை டிப்ளமோ (UNDER GRADUATE DIPLOMA) படிப்பில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

2.M.F.M- மாஸ்டர் ஆப் பேஷன் மேனேஜ்மென்ட்(M.F.M -MASTER OF FASHION MANAGEMENT).

1. பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

அல்லது.

2. NIFT அல்லது NID ஆகிய நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இளநிலை டிப்ளமோ (UNDER GRADUATE DIPLOMA) படிப்பில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

3. M.F.Tech-மாஸ்டர் ஆப் பேஷன் டெக்னாலஜி (M.F.Tech-

MASTER OF FASHION TECHNOLOGY).

1. பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

2. இந்தியாவில் ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் B.F.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வின் அமைப்பு

NIFT நுழைவுத் தேர்வு இரு நிலைகளில் போட்டியாளர்களின் திறமையை பரிசோதிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதாவது –

1. பொதுத்திறன் சோதனை (GENERAL ABILITY TEST) (GAT)

2. படைப்பாற்றல் திறன் சோதனை (CREATIVE ABILITY TEST) (CAT)

-ஆகும் 

நுழைவு தேர்வு எழுதுபவரின் தர்க்கம் மற்றும் திறமையை மதிப்பிடுவதற்காக பொதுத்திறன் சோதனை(GENERAL ABILITY TEST) (GAT) நடத்தப்படுகிறது. 

நுழைவுத் தேர்வு எழுதுபவரின் வடிவமைப்பு மற்றும் வரைதல் திறன் ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக படைப்பாற்றல் திறன் சோதனை (CREATIVE ABILITY TEST) (CAT)நுழைவுத் தேர்வில் இடம் பெறுகிறது.

பொதுவாக தொழில்நுட்ப படிப்புகளுக்கு GENERAL ABILITY TEST) (GAT எனப்படும் பொதுத்திறன் சோதனை மட்டும் போதுமானதாக அமையும்.

ஆனால், வடிவமைப்பு சம்பந்தப்பட்ட படிப்புகளில் (B.Des மற்றும் M.Des படிப்புகளில்) சேர விரும்புபவர்கள் பொதுத்திறன் சோதனை (GENERAL ABILITY TEST) (GAT) மற்றும் படைப்பாற்றல் திறன் சோதனை (CREATIVE ABILITY TEST) (CAT)ஆகிய இரண்டு பகுதிகளையும் தேர்வில் எழுத வேண்டும். 

1.பொதுத்திறன் சோதனை (GENERAL ABILITY TEST) (GAT)

பொதுத்திறன் சோதனை (GENERAL ABILITY TEST) (GAT)பகுதியில் கீழ்கண்ட பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.

1. தொடர்புத் திறன் மற்றும் ஆங்கிலப் புரிதல் (Communication Ability & English Comprehension)

தொடர்பு திறன் மற்றும் ஆங்கிலம் புரிதல் பகுதியில் சொல் அகராதி, வாசிப்பு புரிதல் ,ஒரே மாதிரியான சொற்கள் ,எதிர் சொற்கள், மரபுத்தொடர்கள், சொற்றொடர்கள் மற்றும் இலக்கணம் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம் பெறும்.

2. அளவுசார் திறன் (Quantitative Ability)

அளவு சார் திறன் பகுதியில் அடிப்படை கணிதம் (எஸ் எஸ் எல் சி தரம்) தொடர்பான சதவிகிதங்கள், விகிதங்கள், பின்னங்கள், தனி வட்டி ,கூட்டு வட்டி, நேரம், வேகம், தூரம் ஆகிய பகுதிகள் இடம் பெறும்.

3. பகுப்பாய்வு மற்றும் தர்க்கத் திறன் (Analytical & Logical Ability)

பகுப்பாய்வு மற்றும் தற்கத்திறன் பகுதியில் தர்க்க ரீதியான அனுமானங்கள், இரத்த உறவுகள், திசைகள், இருக்கை ஏற்பாடுகள், குறியீடாக்கம், குறியீட்டை நீக்குதல், மற்றும் தொடர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விகள் அமையும்.

4. பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்( General Knowledge & Current Affairs)

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் பகுதியில் நிலையான பொது அறிவு ,முக்கிய தேசிய நிகழ்வுகள், முக்கிய உலக நிகழ்வுகள், மற்றும் ஆடை வடிவமைப்பு துறை சம்பந்தப்பட்ட பொது விழிப்புணர்வு ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம் பெறும்.

5. நிகழ்வு ஆய்வு (முதுகலைத் திட்டங்களுக்கு) (Case Study (For PG Programmes) )

நிகழ்வு ஆய்வு பகுதியில் சூழ்நிலை அடிப்படையிலான பகுப்பாய்வு மற்றும் பிரச்சனைகள் சிக்கல்கள் ஆகியவற்றிற்கு தீர்வு காணும் வகையில் கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும்.

2.படைப்பாற்றல் திறன் சோதனை (CREATIVE ABILITY TEST) (CAT)

படைப்பாற்றல் திறன் சோதனை (CREATIVE ABILITY TEST) (CAT) பகுதியில் கீழ்கண்ட பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.

1. வரைதல் மற்றும் ஓவியம் தீட்டுதல் (Drawing & Sketching)

வரைதல் மற்றும் ஓவியம் தீட்டுதல் பகுதியில் கையால் ஓவியம் வரைதல் , பொருட்களை வரைதல் மற்றும் விகிதாச்சாரங்களை புரிந்து கொள்ளுதல் ஆகிய பகுதிகளில் கேள்விகள் இடம் பெறும்.

2. வண்ணக் கோட்பாடு: (Color Theory)

வண்ணக் கோட்பாடு பகுதியில் வண்ண உளவியல் வண்ண கலைச்சொற்கள் மற்றும் வண்ணத்தின் புதுமையான பயன்பாடுகள் பற்றிய வினாக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

3. காட்சிப்படுத்தல் (Visualization)

காட்சிப்படுத்துதல் பகுதியில் கதை பலகை வரைதல், இடம் சார்ந்த வடிவமைப்பு, காட்சி துணுக்குகளில் இருந்து கருப்பொருட்களை உருவாக்குதல் மற்றும் முப்பரிமாண காட்சிப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம் பெறும்

நுழைவுத்தேர்வு பற்றிய அறிவிப்பு

NIFT நுழைவுத்தேர்வு பற்றிய அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.

 உதாரணமாக, 2027 ஆம் ஆண்டு தேர்வு எழுத விரும்புபவர்கள் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பிக்க வேண்டும்.

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி பற்றி முழு விவரங்களையும் தெரிய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இணையதள முகவரி: www.nift.ac.in. 

நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப தொடர்பு கொள்ள வேண்டிய இணையதள முகவரி: https//exams.nta.nic.in/niftee/.

மேலும் விவரங்களுக்கு

மேலும் அதிக விவரங்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: 

NIFT Campus,

Hauz Khas, Near Gulmohar Park,

New Delhi - 110 016

Tel: +91-11-26867704, 26542148/49/59

Fax: +91-11-26542151

E-mail: director.delhi@nift.ac.in

X

Daily Thanthi
www.dailythanthi.com