

சென்னை,
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் குடிமைப் பணிகள் மற்றும் இந்திய வனப் பணி தேர்வுகளில், ஆள் மாறாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 'நிகழ்நேர முக அடையாள சரிபார்ப்பு' தொழில்நுட்பம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது கடந்த மாதம் (மே) 24-ந்தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வுகளில், நாடு முழுவதும் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் இந்த புதிய நடைமுறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள தகவலின்படி, விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது தேர்வர்கள் பதிவேற்றிய புகைப்படமும், தேர்வு எழுத வந்த நபரின் முகமும் ஒரே நபர் தானா? என்பதை இந்த தொழில்நுட்பம் துல்லியமாக உறுதி செய்தது. அதற்காக நாடு முழுவதும் உள்ள 2,072 தேர்வு மையங்களில், சுமார் 5.5 லட்சம் தேர்வர்களின் அடையாளம் இதன் மூலம் நேரடியாக சரிபார்க்கப்பட்டது. இதற்கென பிரத்யேக மொபைல் ஆப் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்த பணியில் ஒரே நேரத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
புதிய தொழில்நுட்பம் என்பதால் தேர்வு மையங்களில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரு தேர்வரின் முக அடையாளத்தை சரிபார்க்க சராசரியாக 6 முதல் 8 வினாடிகள் மட்டுமே ஆகியுள்ளது. இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 12,000 முக அடையாள சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தேர்வு மையங்களில் தேர்வர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து யு.பி.எஸ்.சி. தலைவர் அஜய் குமார் கூறும்போது. "ஆள்மாறாட்டம் இல்லாத, தூய்மையான தேர்வுகளை உறுதி செய்வதே எங்கள் முக்கிய நோக்கம். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மின் ஆளுமை பிரிவு உதவியுடன், இந்த தொழில்நுட்பம் முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது" என்றார். யு.பி.எஸ்.சி. தேர்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த 'முகசரிபார்ப்பு' நடைமுறை. வரும் காலங்களில் மற்ற அனைத்து அரசு போட்டி தேர்வுகளிலும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.