மருத்துவப் படிப்பு கலந்தாய்வு: நடப்பாண்டில் ‘கட்-ஆப்' மதிப்பெண் எப்படி இருக்கும்..?

விண்ணப்பங்கள் பெற 23-ந்தேதிக்கு பிறகு காலஅவகாசம் நீட்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பு கலந்தாய்வு: நடப்பாண்டில் ‘கட்-ஆப்' மதிப்பெண் எப்படி இருக்கும்..?
Published on

சென்னை,

'நீட்' மறுதேர்வு முடிவு நேற்று முன்தினம் இரவு வெளியானது. சுமார் 20 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 11.21 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்வு முடிவு வெளியான நிலையில், அடுத்தக்கட்டமாக மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு அந்தந்த மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

விண்ணப்பிக்க அவகாசம்

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வருகிற 23-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 41 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில், 23-ந்தேதிக்கு பிறகு காலஅவகாசம் நீட்டிக்கப்படாது என மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்திருக்கிறது.

'கட்-ஆப்' மதிப்பெண்

இந்தநிலையில் மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கான 'கட்-ஆப்' மதிப்பெண் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எப்படி இருக்கும்? உயருமா? குறையுமா? என்ற மன ஓட்டம் மாணவ-மாணவிகள், பெற்றோரிடம் இருந்து வருகிறது.

இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், ”மருத்துவப் படிப்புக்கான 'கட்-ஆப்' மதிப்பெண் இந்த ஆண்டு உயரும். கடந்த ஆண்டு 690 மதிப்பெண் எடுத்தவர்கள் யாருமே இல்லை. ஆனால் இந்த ஆண்டில் 690-க்கு மேல் 138 பேர் இருக்கிறார்கள். அதேபோல், 600 மதிப்பெண்ணுக்கு மேல் கடந்த ஆண்டில் 1,363 பேர் எடுத்திருந்தனர்.

இந்த ஆண்டில் 9,865 பேர் எடுத்துள்ளனர். 550 மதிப்பெண்ணுக்கு மேல் கடந்த ஆண்டில் 12,280 பேர் எடுத்திருந்த நிலையில், இந்த ஆண்டில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், 500 மதிப்பெண்ணுக்கு மேல் கடந்த ஆண்டில் 52,217 பேர் எடுத்த சூழலில், இந்த ஆண்டில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் எடுத்துள்ளனர்.

அதிகரிக்கவே வாய்ப்பு

அந்த வகையில் 'கட்-ஆப்' மதிப்பெண் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம். 30 முதல் 40 மதிப்பெண் வரை உயரும். இது அகில இந்திய மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியானதும் ஒரு தெளிவான நிலவரம் கிடைத்துவிடும். மருத்துவப்படிப்பு இடங்களும் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மாணவ-மாணவிகள் யாரும் பதற்றப்படவேண்டாம்” என்று அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com