

சென்னை,
நீட் தேர்வு வருகிற 3-ந் தேதி நடைபெற உள்ளது. இளநிலை மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வை எழுதும் மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு முன் கவனிக்க வேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
நடைமுறைகள் பின்வருமாறு;-
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது பயன்படுத்திய கலர் போட்டோ போல் மற்றொரு போட்டோவை உங்களுடைய ஹால்டிக்கெட்டில் ஒட்ட வேண்டும். முதல் பக்கம் பாஸ்போர்ட் அளவு போட்டோ, 2-வது பக்கம் தபால் அட்டை அளவுள்ள போட்டோ ஒட்ட வேண்டும். முதல்பக்க பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் மாணவ-மாணவிகள் தங்கள் கைரேகையை பதிவு செய்வது அவசியம்.
ஹால்டிக்கெட்டில் ஒட்டும் போட்டோவில் இடதுபுறம் தேர்வர்கள் கையொப்பமிட வேண்டும். அதுபோன்று அறை கண்காணிப்பாளர் உங்கள் போட்டோவின் வலதுபுறம் கையெழுத்திடுவார். தேர்வுக்கு செல்லும்போது ஹால்டிக்கெட் கட்டாயம். தேர்வு முடிந்த பின் ஹால்டிக்கெட்டை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.
தேர்வு நாளில் ஹால்டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக தேர்வு மையத்துக்குள் செல்ல வேண்டும். தேர்வு முடிந்த பின் அறைக்கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கும் வரை யாரும் தேர்வு அறையை விட்டு வெளியே வரக்கூடாது. தேர்வுக்கு முந்தைய நாளே தேர்வு மையத்துக்கு சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஹால்டிக்கெட்டுடன் உங்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை (ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பான்கார்டு) கொண்டு செல்ல வேண்டும். தேர்வு மையத்துக்கு ஒளி ஊடுருவும் நிலையில் உள்ள தண்ணீர் பாட்டிலை எடுத்துச்செல்லலாம். ஹால்டிக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும்.
நீலம் அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா பயன்படுத்தலாம். மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் அதற்குரிய அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட உடைகளை மட்டுமே அணிய வேண்டும். உலோகம் சார்ந்த பட்டன், அலங்கார பொருட்கள் உடைகளில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
தேர்வின்போது கணக்கீடுகள் செய்வதற்கு அதற்கென்று வினாத்தாளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு முடிந்த பிறகு ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை தேர்வறை கண்காணிப்பாளர் வசம் ஒப்படைத்த பிறகு தேர்வு அறையை விட்டு வெளியே வர வேண்டும்.