வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறித்த கணவன்–மனைவி கைது தண்ணீர்கேன் போடுவதாக கூறி கைவரிசை

வளசரவாக்கத்தில் தண்ணீர் கேன் போடுவதாக கூறிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த கணவன்–மனைவி
வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறித்த கணவன்–மனைவி கைது தண்ணீர்கேன் போடுவதாக கூறி கைவரிசை
Published on

பூந்தமல்லி,

இருவரும் திடீரென்று அங்கு இருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.

சென்னை வளசரவாக்கம், திருப்பதி நகரை சேர்ந்தவர் ஸ்ரீஅரி (வயது42), இவரது மனைவி சந்திரகலா(38). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த கணவன், மனைவி இரண்டு பேர் தாங்கள் தண்ணீர் போடும் தொழில் செய்து வருவதாகவும், உங்கள் வீட்டிற்கு தண்ணீர் கேன் போட வேண்டுமா என்று கேட்டனர்.

அதற்கு சந்திரகலா ஏற்கனவே வேறு ஒருவரிடம் தண்ணீர் கேன் வாங்குவதாகவும், தேவைப்பட்டால் கூப்பிடுவதாக கூறினார்.

கணவன்மனைவி இருவரும் சந்திரகலாவிடம் பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென்று அவர்கள் இருவரும் சந்திரகலாவின் முகத்தை துப்பட்டாவால் மூடி விட்டு, அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து சந்திரகலா அளித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சூர்யகுமார்(23), அவரது மனைவி காமாட்சி(19), என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சூர்யகுமார் இதே பகுதியில் ஏற்கனவே தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக தண்ணீர் கேன் போடும் தொழிலை விட்டு வேறு வேலைக்கு சென்றுள்ளார். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் சம்பவத்தன்று சந்திரகலா வீட்டிற்கு சென்ற கணவன், மனைவி இருவரும் அவரிடமிருந்து நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சூர்யகுமார், காமாட்சி ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com