நடவடிக்கை எடுக்கக்கோரி 2-வது நாளாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் தர்ணா போராட்டம்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் 2-வது நாளாக பணிகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.
நடவடிக்கை எடுக்கக்கோரி 2-வது நாளாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் தர்ணா போராட்டம்
Published on

திருவண்ணாமலை,

டாக்டர் சிறைபிடிப்பு

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கடந்த 9-ந் தேதி நடந்த சிறப்பு முகாமில் விபத்து ஒன்றில் வலதுகை இழந்த திருவண்ணாமலை அருகேயுள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த சிவபிரகாசம் (வயது 40) என்பவர் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற சான்றிதழ் கேட்டுள்ளார்.

அப்போது அவரை பரிசோதித்த திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டாக்டர் ராகவானந்தம் தற்போது சான்றிதழ் அளிக்க முடியாது. சிறிது நாட்கள் கழித்து வரும்படியும், அப்போது பரிசோதித்து சான்றிதழ் தருவதாகவும் கூறியதாக தெரிகிறது.

இதை அறிந்த மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் உடனடியாக சிவபிரகாசத்துக்கு சான்றிதழ் வழங்கக்கோரி டாக்டர் ராகவானந்தத்தை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டி சிறை பிடித்தனர். சுமார் 3 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்ட டாக்டருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விடிய, விடிய போராட்டம்

இந்த நிலையில் டாக்டர் ராகவானந்தத்தை அலுவலகத்தில் பூட்டி சிறைபிடித்த மாற்றுத்திறனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் நேற்று முன்தினம் பணிகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளி பிரியா கந்தபுனேனி, மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்ட டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் வெங்கடேஷ், ரமேஷ், குமார் ஆகியோரை ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை தர்ணா போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என டாக்டர்கள் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 1 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. டாக்டர்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினார்கள்.

2-வது நாளாக போராட்டம்

நேற்று காலை 2-வது நாளாக டாக்டர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் பழனி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்ட டாக்டர்களிடம் போராட்டத்தை கைவிடும்படியும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். அதற்கு டாக்டர்கள் கைது செய்யும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று கூறினார்கள்.

இந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில், செயலாளர் பாலகிருஷ்ணன், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாநில செயலாளர் சாமிநாதன், சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்க மாநில செயலாளர் ரவீந்தரநாத் உள்பட பலர் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராகவானந்தனை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்கள். மேலும் டாக்டர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மாலையில் அரசு மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தர்ணாவில் கலந்து கொண்டனர்.

கலெக்டர் பேச்சுவார்த்தை

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே மாலை 6 மணி அளவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராகவானந்தனிடம் நேரில் விசாரணை நடத்தினார்.

பின்னர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கலெக்டர் பிரசாந் மு.வடநேரே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய கால அவகாசம் தரும்படியும், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது. டாக்டர்களுக்கு பணியின் போது பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.

அதற்கு டாக்டர்கள் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளை கைது செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்று கூறினார்கள். பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததை அடுத்து கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவசர சிகிச்சை பிரிவை தவிர...

டாக்டரை சிறைபிடித்த மாற்றுத்திறனாளிகளை கைது செய்யக்கோரி இன்று (வியாழக்கிழமை) திருவண்ணாமலை மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் அவசர சிகிச்சை பிரிவை தவிர மற்ற பிரிவுகளில் டாக்டர்கள் பணியில் ஈடுபடமாட்டார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவார்கள் என போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் தெரிவித்தனர்.

டாக்டர்களின் தர்ணா போராட்டத்தின் காரணமாக அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் டாக்டர்கள் பணிபுரிந்தனர். பல பிரிவுகள் அடைக்கப்பட்டிருந்தது. டாக்டர்களின் போராட்டம் தெரியாமல் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com