இரும்பு தடுப்புகளை சாய்த்து கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்த விவசாயிகள் - தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

உயர்மின்கோபுரம் அமைக்கும் இடத்திற்கு இழப்பீடு தொகை பெற்றுத்தரக்கோரி போலீசாரின் இரும்பு தடுப்புகளை கீழ தள்ளி கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்த விவசாயிகள் தரையில் உருண்டு கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரும்பு தடுப்புகளை சாய்த்து கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்த விவசாயிகள் - தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் குன்னுமுறிஞ்சி, பாலானந்தல், கிளியாப்பட்டு, பாடகம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தனியார் நிறுவனம் மூலம் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதில் சில பகுதிகளில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கம்பிகள் இணைக்கும் பணிகளும், சில பகுதிகளில் உயர்மின்கோபுரங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

பெரும்பாலும் இந்த உயர்மின் கோபுரம் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் இடங்களில் உள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களின் ஒப்புதலின்றி வலுக்கட்டாயமாக அங்குள்ள பயிர்களை சேதம் செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதினால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீடு தொகை பெற்று தரக்கோரி நேற்று பகல் 12.10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை மூடி அவர்களை தடுத்து நிறுத்தினர்.

ஆனால் மனு அளிக்க வந்த விவசாயிகள் பேரிகார்டுகள் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகளை கீழே தள்ளி, மூடிய கேட்டை திறந்து கண்டன கோஷங்கள் எழுப்பிய படி ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தின் முன்பு ஆண்கள் மற்றும் பெண்கள் சிலர் படுத்து உருண்டு கதறி அழுதனர். விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று விடாத வகையில் அலுவலகத்தின் கதவுகளை போலீசார் பூட்டினர். தொடர்ந்து அவர்கள் தரையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகமே போர்களம் போல் காட்சி அளித்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் கூறுகையில், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதினால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் தனியார் நிறுவனம் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை.

இதுகுறித்து பலமுறை கலெக்டரிடம் முறையிட்டும் தங்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கவில்லை.

கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்ட கலெக்டர்களை போல திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரும் நிவாரணம் பெற்று தர வேண்டும். மேலும் சட்டப்படி எங்கள் நிலத்தின் மார்க்கெட் மதிப்பில் 10 மடங்கு இழப்பீட்டு தொகையை கலெக்டர் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அப்போது கலெக்டர் சந்தீப்நந்தூரி காரில் அலுவலகத்திற்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்திக்காமல் தனது அறைக்கு சென்றார். அதனால் வேதனை அடைந்த விவசாயிகள் மீண்டும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் கலெக்டரிடம் குறிப்பிட்ட விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர். அதன்பின் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை தடுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறிவிட்டு அங்கிருந்து 3.30 மணியளவில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகமே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com