வசீகரிக்கும் நெயில் பாலிஷ் நிறங்கள்

மாநிற சருமம் கொண்டவர்கள், வெளிர் நிறங்களை தவிர்ப்பது சிறந்தது. அவை கைகளுக்கு மங்கலான தோற்றத்தை கொடுக்கும். குறிப்பாக, சில்வர், வெள்ளை, நியான் ஆகிய நிறங்களை தவிர்ப்பது சிறந்தது.
வசீகரிக்கும் நெயில் பாலிஷ் நிறங்கள்
Published on

கைகளின் வசீகரத்தை அதிகரிப்பவை நகங்கள். அவற்றை பராமரிப்பதிலும், அழகுபடுத்துவதிலும் பெண்களின் ஆர்வம் மிகுந்திருக்கும். நகங்களின் அழகை மேலும் அதிகரிப்பதற்காக விதவிதமான வண்ணங்களில் நகப்பூச்சு எனப்படும் நெயில் பாலிஷ் பூசுவார்கள். சருமத்திற்கு பொருந்தும் வகையிலான நெயில் பாலிஷை தேர்ந்தெடுத்தால், நகங்களின் அழகை மேலும் மெருகூட்ட முடியும். அதற்கு உதவும் சில ஆலோசனைகள் இதோ...

நிறத்தை கவனியுங்கள்:

சிலரின் சருமம் மாநிறமாக இருந்தாலும், நகத்தின் நிறம் வெண்மையாக இருக்கும். இன்னும் சிலருக்கு சரும நிறம் வெண்மையாக இருந்தாலும், நகத்தின் நிறம் கருமையாக இருக்கும். இதை கவனிக்காமல், நெயில் பாலிஷின் நிறத்தை தேர்வு செய்தால், அது கைகளின் அழகை கெடுக்கும்.

அடர்நிற சருமம்:

சற்று கருமையான அல்லது மாநிற சருமம் கொண்டவர்கள், பழுப்பு (பிரவுன்) நிறத்தை தவிர மற்ற அடர் நிறங்களை தேர்வு செய்யலாம். அடர் பச்சை, பர்கண்டி எனப்படும் அடர் சிவப்பு போன்ற நிறங்களில் நெயில் பாலிஷ் தேர்ந்தெடுக்கலாம். இது கைகளுக்கு வசீகர தோற்றம் கொடுப்பதுடன், நகங்களுக்கும் அழகாக பொருந்தும். பிரகாசமான ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறங்கள் நகங்களுக்கு கவர்ச்சிகரமான அழகையும், மாடர்ன் தோற்றத்தையும் தரும்.

மாநிற சருமம் கொண்டவர்கள், வெளிர் நிறங்களை தவிர்ப்பது சிறந்தது. அவை கைகளுக்கு மங்கலான தோற்றத்தை கொடுக்கும். குறிப்பாக, சில்வர், வெள்ளை, நியான் ஆகிய நிறங்களை தவிர்ப்பது சிறந்தது.

வெள்ளை நிற சருமம்:

வெள்ளை நிற சருமம் கொண்டவர்களுக்கு பிங்க், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு போன்ற பிரகாசமான மற்றும் துடிப்பான நிறங்கள் பொருந்தும். தங்கம் மற்றும் சில்வர் போன்ற உலோக நிறங்கள், கைகளின் வசீகரத்தை மேம்படுத்தும். நெயில் ஆர்ட்ஸ் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நிறங்கள் சிறப்பாக இருக்கும். இவர்கள் அடர் ஊதா, நீலம், அடர் சிவப்பு, மெட்டாலிக் பிரவுன் போன்ற நிறங்களை தவிர்க்க வேண்டும்.

நிகழ்வுகளுக்கு ஏற்ற நிறங்கள்:

பண்டிகைகள் மற்றும் முக்கிய விசேஷங்களுக்கு செல்லும்போது, கை நகங்களில் அணியும் வண்ணமும் பிறரை வசீகரிக்கும். எனவே, அதுபோன்ற சமயங்களில் சிவப்பு, பர்கண்டி போன்ற பளபளப்பான வண்ணங்களில் நகப்பூச்சு பயன்படுத்தலாம்.

கவுன் போன்ற உடைகள் அணியும்போது, பிரகாசமான சிவப்பு மற்றும் அடர்ந்த நிறங்கள் கொண்ட நெயில் பாலிஷை தேர்வு செய்வது நகங்களுக்கு மேலும் அழகு சேர்க்கும்.

இரவு நேர விருந்துகளில், உங்கள் நகங்களை பிரகாசிக்க செய்யும் வகையிலான வண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இதற்கு அடர் நிறங்களில் ஒன்றை அடித்தளமாக முதலில் தேர்வு செய்து, அதன்மீது மினுமினுக்கும் அல்லது இருளில் ஒளிரும் வகையிலான நிறங்களை பூசலாம்.

குளிர்காலத்தில் ஊதா, சாம்பல், சில்வர் மற்றும் வெளிர் இளஞ்சிவப்பு நிறங்களை தேர்வு செய்யலாம். கோடையில் சிவப்பு, பச்சை மற்றும் மென்மையான நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

பச்சை, மஞ்சள் மற்றும் பிரகாசமான நீல நிறங்களை வசந்த காலங்களிலும், சாம்பல், சில்வர், ஆரஞ்சு, ஊதா மற்றும் அடர் நீல நிறங்களை இலையுதிர் காலங்களிலும் தேர்வு செய்யலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com