புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர்-மாமியார் கைது

சாகர் அருகே, வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர்-மாமியார் கைது
Published on

சிவமொக்கா:

வரதட்சணை கொடுமை

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா திகட்டேகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா (வயது 23). இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த ஈஸ்வரா என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது சுஷ்மிதாவின் பெற்றோர், நகை, பணம், பொருட்கள் ஆகியவற்றை ஈஸ்வராவுக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

திருமணம் முடிந்த புதிதில் கணவன்-மனைவி சந்தோஷமாக இருந்தனர். இந்த நிலையில் அவர்களது வாழ்க்கையில் வரதட்சணை என்ற அரக்கனால் புயல் வீச தொடங்கியது. அதாவது கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் ஈஸ்வரா மற்றும் மாமியார் பசம்மா ஆகியோர் சுஷ்மிதாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

தற்கொலை

ஆனால் சுஷ்மிதா வரதட்சணை வாங்கி வர மறுத்ததாக தெரிகிறது. ஆனாலும் கணவரும், மாமியாரும் அவரை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுஷ்மிதா, நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் தற்கொலை செய்துகொண்ட சுஷ்மிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வரதட்சணை கொடுமை காரணமாக சுஷ்மிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

கணவர்-மாமியார் கைது

இதற்கிடையே, சுஷ்மிதாவின் குடும்பத்தினர் சாகர் போலீசில் ஈஸ்வரா மற்றும் பசம்மா மீது புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஷ்மிதாவின் கணவர் ஈஸ்வரா மற்றும் மாமியார் பசம்மா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம்

போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com