உலகக்கோப்பை கால்பந்து: 'வானவில் நிற டிசர்ட்' அணிந்ததால் மைதானத்திற்கு நுழைய அனுமதி மறுப்பு


உலகக்கோப்பை கால்பந்து: வானவில் நிற டிசர்ட் அணிந்ததால் மைதானத்திற்கு நுழைய அனுமதி மறுப்பு
x

2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது.

தோஹா,

உலகக்கோப்பை கால்பந்து போட்டி உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான விளையாட்டில் முதல் இடத்தில் உள்ளது. கால்பந்து விளையாட்டிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் உள்ளது.

இதனிடையே, 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் மத்திய கிழக்கு நாடான கத்தாரில் நடைபெறுகிறது. அதேவேளை, கத்தார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதில் துவக்கம் முதலே பெரும் சர்ச்சைகள் நிலவி வருகிறது.

கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானம் மற்றும் மைதானத்திற்கு வெளியே மதுபானம் குடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மது குடித்துவிட்டு மைதானத்திற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர், ரசிகைகள் கண்ணியமான உடையை அணிந்து போட்டியை கண்டுகளிக்க வேண்டும். தூண்டும் வகையில் உடலின் அங்கங்கள் தெரியும்படி ஆடைகளை அணியக்கூடாது, உடலில் போடப்பட்டுள்ள டாட்டூக்கள் தெரியும்படியும் ஆடைகள் அணியக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இசை உபகரணங்கள் உள்பட பல்வேறு கொண்டாட்ட பொருட்களை மைதானத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறும் ரசிகர், ரசிகைகளை கைது செய்து தண்டனை வழங்கவும் சிறப்பு கோர்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளால் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நேரில் கண்டுகளிக்க கத்தார் வரும் வெளிநாட்டு ரசிகர், ரசிகைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது.

ஆனால், கத்தாரில் கட்டுமானம் உள்பட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வரும் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை உலகக்கோப்பை போட்டியை பார்க்க மைதானத்தில் குவிப்பதாக கத்தார் மீது குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா - வெல்ஸ் அணிகள் இடையே இன்று போட்டி நடைபெற்றது. அல் ரியான் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை காண அமெரிக்கா பத்திரிக்கையாளர் கிராண்ட் வெல்ஹ் சென்றார்.

அவர், 'வானவில் நிற டிசர்ட்' அணிந்து மைதானத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது, அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். 'வானவில் நிற டிசர்ட்' எல்ஜிபிடி எனப்படும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாகதாக கூறப்படுகிறது. இதனால், பத்திரிக்கையாளர் கிராண்டை தடுத்து நிறுத்திய கத்தார் போலீசார் மைதானத்திற்குள் நுழைய வேண்டுமானால் வானவில் நிற டிசர்ட்டை கழற்றிவிட்டு வேறு உடை அணிய வேண்டும் என கூறியுள்ளனர்.

இறுதியில் 30 நிமிடங்களுக்கு பின் டிசர்ட்டை மாற்றிய பின் பத்திரிக்கையாளர் கிராண்டை கத்தார் போலீசார் மைதானத்திற்குள் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து கிராண்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்ட நிலையில் அந்த பதிவிற்கு கத்தாரை சேர்ந்த பிரபல கல்வியலாளர் நயப் பின் நஹர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நயப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கத்தார் நாட்டவனாக நான் பெருமை படுகிறேன். தங்கள் பண்பாடு உலகளாவியதல்ல என்பதை மேற்கத்திய நாடுகள் எப்போது உணரப்போகிறது என்று எனக்கு தெரியவில்லை. மாற்று பண்பாடு கொண்ட பிற கலாச்சாரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகள் மனிதாபிமானத்திற்கு செய்தித்தொடர்பாளர்கள் அல்ல என்பதை மறந்துவிடக்கூடாது' என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க... உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண பணம் கொடுத்து 'போலி ரசிகர்களை' மைதானத்தில் குவிக்கிறதா கத்தார்...?


Next Story