

மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகம் பரவி பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தினமும் பல இடங்களில் நோய் தொற்று முற்றிய நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் இறந்து வருகின்றனர்.
இதனால் தங்கள் பகுதிகளில் நோய் தொற்று பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொண்டு மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மற்றும் வெண்புருஷம் மீனவ கிராமத்தில் வெளி ஆட்கள் யாரும் ஊருக்குள் வராதவண்ணம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இரு சக்கர வாகனம், கார், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு வராதவண்ணமும், மீன் வாங்கவும் பொதுமக்கள் வராதபடி தடை விதிக்கப்படுகின்றனர்.
தடுப்புகள் அமைத்தனர்
இதற்காக ஊர் நுழைவு வாயிலில் சாலையில் கற்கள் கொட்டியும், கம்புகளால் தடுப்புகள் அமைத்தும் ஊர் பஞ்சாயத்தார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அப்படி தடையை மீறி ஊருக்குள் வரும் நபர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என கொக்கிலமேடு, வெண்புருஷம் அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெண்புருஷம், கொக்கிலமேடு இரு மீனவ பகுதியிலும் கடற்கரை பகுதிகளில் மீன் விற்பனை செய்ய அனுமதியில்லை எனவும், கல்பாக்கம் அணுமின் உற்பத்தி பிரிவுக்கு செல்லும் சாலையில் மீன் விற்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.