

பெங்களூரு,
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படுகிறது. இதற்காக பயனாளிகள் வருகிற 15-ந் தேதி முதல் அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
பெங்களூருவில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டி கொடுக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
தேர்வு செய்ய...
இந்த திட்டத்திற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கி, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.
இதில் வீட்டு வசதித்துறை மந்திரி கிருஷ்ணப்பா, தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ்லாட், தலைமை செயலாளர் சுபாஷ்சந்திர குந்தியா, முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் எல்.கே.அதீக் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தை அமல்படுத்துவது, பயனாளிகளை எப்படி தேர்வு செய்வது, அதற்கான நிலத்தை அடையாளம் காண்பது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
1,100 ஏக்கர் நிலம் தேவை
பெங்களூருவில் ஏழை மக்களுக்காக ஒரு லட்சம் வீடுகளை கட்ட முடிவு செய்துள்ளோம். இதற்கு 1,100 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் நிலங்களை அடையாளம் கண்டுள்ளோம். நகரில் ஏற்கனவே நாங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை மீட்டு வைத்துள்ளோம். அந்த நிலத்தில் இந்த வீடுகள் கட்டி கொடுப்போம்.
இந்த திட்டத்தில் தரைதளம் மற்றும் 3 மாடிகள் அடங்கிய குடியிருப்பு கட்டிடம் கட்டி பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்படும். இதற்கு தேவையான நிலத்தை ராஜீவ்காந்தி வீட்டு வசதி கழகத்திற்கு வழங்கும்படி நான் இன்று (அதாவது நேற்று) வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுவரை 430 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளோம். அந்த நிலத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்த்து ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
விண்ணப்பிக்கலாம்
இந்த திட்டத்தின் பயனாளிகள் பெங்களூருவில் 5 ஆண்டுகளுக்கும் அதிகமாக வசித்து இருக்க வேண்டும், வறுமை கோட்டுக்கு கீழ் இருக்க வேண்டும் மற்றும் சொந்த வீடு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அத்தகையவர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வீடுகள் வேண்டி பயனாளிகள் வருகிற நவம்பர் மாதம் 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு 80 சதவீதமும், பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சி எல்லைக்குள் இருப்பவர்களுக்கு 20 சதவீதமும் இந்த வீடுகள் ஒதுக்கப்படும்.
ஒரு வீட்டுக்கு ரூ.5.50 லட்சம் செலவு செய்யப்படும். இதில் பயனாளிகளுக்கு பொது பிரிவினருக்கு ரூ.2.70 லட்சமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.3.70 லட்சமும் அரசு சார்பில் மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள தொகையை பயனாளிகள் வழங்க வேண்டும். அவர்களுக்கு வங்கிகளில் கடன் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி இருக்கிறோம்.
இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.