2ஜி தீர்ப்பு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேட்டி

2ஜி தீர்ப்பு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கூறினார்.
2ஜி தீர்ப்பு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேட்டி
Published on

கோவை,

2ஜி தீர்ப்புக்கு பிறகு தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செண்டைமேளம், கரகாட்டத்துடன் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர் கோவில்பாளையத்துக்கு சென்றார்.

அங்கு அவருக்கு தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, 2ஜி தீர்ப்பு மூலம் நான் குற்றவாளி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதில் ஊழல் நடைபெற வில்லை என்று நிரூபணமாகியுள்ளது. நீதி வென்றுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் மக்கள் உண்மைத்தன்மையை புரிந்து கொண்டுள்ளனர் என்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, 2ஜி தீர்ப்பை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். அதனால் தான் மிகப்பெரிய வரவேற்பை அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆ.ராசாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, இளித்துறை ராமச்சந்திரன், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில துணைச்செயலாளர் மு.நாகராசன், திருப்பூர் நகர இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில்குமார், தளபதி முருகேசன், சூலூர் தொகுதி ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பெரியநாயக்கன்பாளையத்தில் ஆ.ராசாவை வரவேற்பதற்காக பஸ் நிலையம் அருகே உள்ள திடலில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்து, மேடையை அகற்ற கூறினார்கள். இதனால் தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தி.மு.க.வினர் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மேடைக்கு அனுமதி கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com