முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் கொலைவழக்கு: மேலும் 2 வாலிபர்கள் கோர்ட்டில் சரண் சிறையில் அடைக்கப்பட்டனர்

காரைக்கால், முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் கொலைவழக்கு தொடர்பாக மேலும் 2 பேர் நேற்று காரைக் கால் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்
முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் கொலைவழக்கு: மேலும் 2 வாலிபர்கள் கோர்ட்டில் சரண் சிறையில் அடைக்கப்பட்டனர்
Published on

முன்னாள் அமைச்சர் கொலை வழக்கு

புதுச்சேரி முன்னாள் அமைச்சரானரான காரைக்கால் திரு-பட்டினத்தை சேர்ந்த வி.எம்.சி.சிவக்குமார், கடந்த 3-ந் தேதி நிரவியில் அவர் கட்டி வரும் திருமண மண்டபம் கட்டுமான பணிகளை பார்வையிடச் சென்றபோது 7 பேர்களைக் கொண்ட கூலிப்படையினரால் வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக கடந்த 11-ந் தேதி திருச்சியை சேர்ந்த பிரபு, சூரியபிரகாஷ், கார்த்திக் மற்றும் சண்முகம் ஆகியோரும், கடந்த 23-ந் தேதி திரு-பட்டினத்தை சேர்ந்த எழிலரசியும் புதுச்சேரி கோர்ட்டில் சரணடைந்தனர்.

மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண்

முன்னதாக விருதுநகரை சேர்ந்த குணசேகரன் மற்றும் தமிழரசன் ஆகிய இருவர் கரூர் குற்றவியல் கோர்ட்டில் கடந்த 7-ந் தேதி சரண டையச் சென்றனர். ஆனால் அவர்களை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி, சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்றுள்ளதால் அங்குள்ள ஏதாவது ஒரு கோர்ட்டில் சரணடையும்படி கூறியதை தொடர்ந்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்கள். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று காலை 9.30 மணியளவில் குணசேகரன், தமிழரசன் இருவரும் காரைக்கால் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர் மன்றத்தில் நீதிபதி பிரபு முன்னிலையில் சரணடைந்தனர். இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் காரைக்கால் கிளை சிறைச்சாலையில் கொண்டு போய் அடைத்தனர்.

கைதியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி

வி.எம்.சி.சிவக்குமார் கொலை தொடர்பாக ஏற்கனவே கோர்ட்டில் சரண் அடைந்த 4பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை சம்பவம் நடந்த போது கும்பல் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்ற கூலிப்படையினர் வி.எம்.சி.சிவக்குமாரின் மதுபானக்கடை மீது வெடிகுண்டுகளை வீசிய காட்சிகள் அங்கு வைக்கப்பட்டு இருந்த சிசி டிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

அதை கைப்பற்றிய போலீசார், சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த படங்களையும், சமீபத்தில் புதுச்சேரி கோர்ட்டில் சரணடைந்த 4 பேரையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது அவர்களில் ஒருவரான திருச்சியை சேர்ந்த சூரி என்கிற சூரியபிரகாஷ் வெடிகுண்டு வீசியது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து காரைக் கால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூரியபிரகாசிடம் விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவரை காரைக்கால் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர் மன்றத்தில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தி அனுமதி கேட்டனர். இதுகுறித்து விசாரித்த நீதிபதி பிரபு, அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் அழைத்துச் செல்ல அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து சூரியப்பிரகாசை கோர்ட்டில் இருந்து போலீசார் அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com