

கோவில்பட்டி,
பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் இருந்து திருச்செந்தூருக்கு விவசாயிகள் நடைபயணம் தொடங்கினர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். மதுரை உயர்நீதிமன்றம் விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்தி, மாநில அரசுகளை கண்டித்தும் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், ஒரு கோடி விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று, திருச்செந்தூர் முருகபெருமானிடம் கோரிக்கை மனு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று காலையில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து விவசாயிகள் திருச்செந்தூருக்கு நடைபயணத்தை தொடங்கினர். சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.
தொழில் அதிபர் கோவிந்தராஜ் கொடி அசைத்து நடைபயணத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் ஜெயகண்ணன், மாநில அமைப்பாளர் காளிராஜ், மாநில துணை தலைவர் நம்பிராஜ் உள்ளிட்ட திரளான விவசாயிகள் திருச்செந்தூருக்கு நடைபயணமாக புறப்பட்டு சென்றனர்.