எண்ணூர் முகத்துவாரத்தை சீரமைக்காவிட்டால் போராட்டம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் எண்ணூர் முகத்துவாரத்தை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
எண்ணூர் முகத்துவாரத்தை சீரமைக்காவிட்டால் போராட்டம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
Published on

திருவொற்றியூர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நேற்று எண்ணூரில் ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதியை பார்வையிட்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

மழை காலங்களில் கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலக்கின்றது. இந்த பகுதியில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நீர்பிடிப்பு உள்ள அலையாத்திக்காடு பகுதியில் மீன் குஞ்சுகள் பொறித்து பின் கடலுக்குள் செல்லும்.

இந்த பகுதியில் காமராஜர் துறைமுகத்தின் விரிவாக்கம் மற்றும் சிறிய தொழிற்சாலைகளின் ஆக்கிரமிப்பு, வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொட்டப்படும் சாம்பல் கழிவு மேடுகள் ஆகியவற்றால் ஆற்றில் இருந்து வரும் நீர் கடலுக்குள் செல்லமுடியாமல் திருவொற்றியூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட 52 பகுதிகளில் மழைநீர் வெள்ளம் புகுந்து பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு 8 ஆயிரம் ஏக்கரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முகத்துவாரம் பகுதியை ஆழப்படுத்தி சீரமைக்க வேண்டும். ஆறு, கால்வாயில் இருந்து வரும் தண்ணீரை கடலில் கலக்கும்படி செய்து வடசென்னையை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங், மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், பகுதி செயலாளர் ஜெயராமன், தலைவா பார்த்தசாரதி உள்ளிட்டோர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com