

10ம் வகுப்பு மாணவன்
ஈரோடு குமலன்குட்டை செல்வநகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 40). மருத்துவ பிரதிநிதி. இவருடைய மனைவி ரேவதி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் ஷோரூமில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சரண் (16) என்கிற மகன் உள்ளார். ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
ரமேஷ்குமாருக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதன்காரணமாக கணவன்மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், கடந்த 3 மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே ரமேஷ்குமார் இருந்து வந்தார். ரேவதியின் வருமானத்தை வைத்து தான் குடும்பம் நடந்து வந்தது. மேலும் ரமேஷ்குமாரின் செலவுக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்தபிறகு மகனுக்கு ஆதரவாக யாரும் இருக்க முடியாது என்று ரமேஷ்குமார் நினைத்தார். இதனால் சரணை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சரண் பள்ளிக்கூடத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். ரேவதி வேலைக்கு சென்றுவிட்டதால் ரமேஷ்குமார் வீட்டில் இருந்தார். மனைவி வருவதற்கு முன்பு மகனை கொன்றுவிட்டு ரமேஷ்குமார் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். இதனால் குடிக்கும் தண்ணீரில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை கலந்து ரமேஷ்குமார் தனது மகன் சரணுக்கு கொடுத்தார். அவரும் மாத்திரை கலந்த தண்ணீரை குடித்துவிட்டார்.
சிறிது நேரத்தில் சரண் மயக்கம் அடைந்துவிட்டார். அதன்பின்னர் ரமேஷ்குமாரும் அதிக அளவில் தூக்க மாத்திரையை சாப்பிட்டார். மேலும் மகன் பிழைத்துவிடக்கூடாது என்று நினைத்த ரமேஷ்குமார் சிறிதும் இரக்கமின்றி குளியல் அறைக்கு சரணை தூக்கி சென்றார். அங்கு கீழே சரணை படுக்க வைத்துவிட்டு தண்ணீரை திறந்துவிட்டார். குளியல் அறையில் 1 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீரில் சரண் மூழ்கினார். பின்னர் ரமேஷ்குமாரும் அங்கேயே மயங்கி விழுந்தார்.
குளியல் அறையில் இருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் தொடர்ந்து கேட்டதால் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால் அவர்கள் ரமேஷ்குமாரின் வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது குளியல் அறையில் தந்தையும், மகனும் மயங்கி கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வேலைக்கு சென்றிருந்த ரேவதிக்கு அவர்கள் செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் மயங்கி கிடந்த ரமேஷ்குமாரையும், சரணையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்கள் 2 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள் சரண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரமேஷ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோட்டில் மகனை கொன்றுவிட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.