நீண்ட ஆயுளுக்கு அவசியமான ‘7’
நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவிய 7 ஆச்சரியமான ரகசியங்களை டாக்டர் ஜான் ஷார்பென்பர்க் பகிர்ந்துள்ளார்.
சீனாவை சேர்ந்த டாக்டர் ஜான் ஷார்பென்பர்க்குக்கு 101 வயதாகிறது. இந்த வயதிலும் கார் ஓட்டுவது, தோட்ட வேலைகளில் கவனம் செலுத்துவது என உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.
ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் படித்த இவர், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வது மற்றும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். ஆரோக்கிய வாழ்வு குறித்து தொடர்ந்து ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
இவர் 100-வயதை கடந்த பிறகும்தான் ஆரோக்கியமாக வாழ உதவிய 7 விஷயங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அதனை அனைவரும் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
1. புகைப்பழக்கத்தை தவிர்த்தல்
உலகளவில் மரணம் அதிகம் நிகழ்வதற்கு காரணங்களுள் ஒன்று, புகைப்பழக்கம். இது நுரையீரலுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இதயம், மூளை, சிறுநீரகங்கள் உள்பட உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் சேதத்தை ஏற்படுத்தும். அவ்வப்போது புகைப்பிடிப்பது கூட ஆபத்தை அதிகரிக்கவே செய்யும்.
2. மதுவை விலக்குதல்
‘மிதமான மதுப்பழக்கம் இதயத்திற்கு ஆரோக்கியமானது’ என்ற கருத்து பல வருடங்களாக உலவுகிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்க சர்ஜன் ஜெனரல் ஆய்வறிக்கைகள் உள்பட சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் அந்த கருத்து தவறானது என்று நிரூபித்துள்ளன. நான் அந்த காலகட்டத்தில் இருந்தே மது மீது நாட்டம் கொண்டதில்லை, மது இதயத்துக்கு நல்லது என்பதை நம்பவுமில்லை. இப்போது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார் டாக்டர் ஜான் ஷார்பென்பர்க்.
3. உடற்பயிற்சி
குழந்தை பருவம், இளமை பருவத்தில் இருக்கும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை வாழ்க்கையின் பிற்பகுதியில் தொடர்வதில்லை. குறிப்பாக 40 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் சுறுசுறுப்பின்றி இருப்பார்கள். அப்போதுதான் வளர்சிதை மாற்றம் குறைந்து, நோய்கள் தாக்கத்தொடங்கும். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்குவது அல்லது உடற்பயிற்சி செய்வதுதான் அதனை தவிர்க்க ஒரே வழி என்கிறார் ஜான் ஷார்பென்பர்க். இவர் உடல் ரீதியாக தன்னை சுறுசுறுப்பாக்கிக்கொள்ள நிலம் வாங்கி 3 ஆயிரம் ஸ்ட்ராபெர்ரி செடிகளை கொண்ட தோட்டத்தை உருவாக்கி அதனை பராமரிக்கிறார். தினமும் 2 மைல்களுக்கு மேல் நடப்பது கூட உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை தனது அனுபவத்தின் மூலம் ஆய்வு செய்து வருகிறார்.
4. உண்ணாவிரதம்
மாதத்திலோ, வாரத்திலோ குறிப்பிட்ட நேரம் மட்டும் உணவு உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருப்பதும் நல்லது என்கிறார். குறிப்பாக இரவு உணவை தவிர்ப்பது செரிமான செயல்பாட்டுக்கு நீண்ட நேர ஓய்வை அளிக்கும். இது வளர்சிதை மாற்றம், இன்சுலின் சமநிலை மற்றும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவிடும். இந்த உண்ணாவிரதத்தை முறையாக பின்பற்றுவது இதய ஆரோக்கியம், வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது.
5. இறைச்சியைத் தவிர்த்தல்
விலங்குகளின் இறைச்சியை தவிர்த்து தாவர அடிப்படையிலான சைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். 20 வயதுக்கு பிறகு அசைவ உணவுகளை படிப்படியாக குறைத்துவிடுவது அல்லது அறவே தவிர்த்து விடுவது நல்லது என்பது ஜான் ஷார்பென்பர்க்கின் கருத்தாக இருக்கிறது.
6. சர்க்கரையை தவிர்த்தல்
சர்க்கரை அதிகமாக சேர்த்துக்கொள்வது உடல் பருமன், இதய நோய், கல்லீரல் பிரச்சினைகள் மற்றும் மனச்சோர்வு அபாயத்தை அதிகரிக்க செய்யும். பெரும்பாலானோர் தினசரி பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக சர்க்கரை உட்கொள்கிறார்கள். டாக்டர் ஷார்பென்பெர்க்கின் அணுகுமுறை இனிப்பை முற்றிலுமாக குறைப்பது அல்ல. பழங்களில் இருந்து இயற்கை சர்க்கரைகளை உட்கொள்வது போன்ற ஆக்கப்பூர்வமான உணவு பழக்கம் ஆகும். தான் உண்ணும் உணவு பதார்த்தங்களில் சர்க்கரை சேர்க்கப்படாவிட்டாலும் சுவையாகவும் இருக்கும் என்கிறார்.
7. கொழுப்பை குறைத்தல்
சிவப்பு இறைச்சி, கொழுப்பு அதிகமுள்ள பால் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகளால், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுடன் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, இதுபோன்ற உணவுப் பொருட்களை குறைவாக சாப்பிடுவது, இதயத்தைப் பாதுகாக்கும் ஒரு கவசம் என்கிறார் டாக்டர் ஷார்பென்பெர்க்.
டாக்டர் ஷார்பென்பெர்க்கின் உணவு பழக்கவழக்கங்கள் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரை செய்த உணவுகளுடன் ஒத்துப்போகின்றன. அதாவது தினசரி கலோரிகளில் 6 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக நிறைவுற்ற கொழுப்பை உட்கொள்ளவேண்டும்.
டாக்டர் ஷார்பென்பெர்க்கின் உணவு முறை என்பது மிக கடுமையானது அல்ல. ஆனால், நன்கு திட்டமிட்ட, மாறுபட்ட மற்றும் தாவர அடிப்படையிலான உணவு முறை ஆகும்.








