முட்டை பிரியரா நீங்கள்..? கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள்

அதிக அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட முட்டைப் பொரியல், முட்டை வறுவல் போன்றவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது.
முட்டை சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை, முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஆரோக்கிய உணவு
Published on

தினமும் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. முட்டையில் உயர்தர புரதம், அத்தியாவசிய வைட்டமின்கள் பி12, டி, ஏ ஆகியவை உள்ளன. தசை சீரமைப்பு, மூளை செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கும் செலினியம் மற்றும் கோலின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும் மிதமாகவும், சமநிலையுடனும் முட்டை சாப்பிடுவது முக்கியமானது. அதாவது அதிக கொழுப்புள்ள உணவுடன் சேர்த்து முட்டையையும் அதிகமாக சாப்பிடுவது சிலருக்கு கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடும். எனவே முட்டை சாப்பிடும் விஷயத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி பார்ப்போம்.

செய்ய வேண்டியவை

1. மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவை சிலர் தவிர்த்துவிடுவார்கள். ஆனால் அதில் கோலின் மற்றும் வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அதனால் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவதைவிட முழு முட்டையையும் சாப்பிடுவதே அதிக நன்மை பயக்கும். முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடக்கூடாது என்று டாக்டர் அறிவுறுத்தினால் மட்டுமே சாப்பிடக்கூடாது.

2. அவித்த முட்டை

அவித்த முட்டையில் சத்துக்கள் நேரடியாக கிடைக்கின்றன. முட்டையை வேகவைக்கும்போது கலோரிகள் குறையும். ஆரோக்கியமற்ற கொழுப்புகளும் நீங்கி விடும். ஆனால் முட்டையை பொரிப்பது கலோரிகளை அதிகரிக்கச் செய்யும். தேவையற்ற எண்ணெய்யும் உடலில் சேரும். இது இதய ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்காது. எனவே, பொரித்த முட்டையைவிட அவித்த முட்டையே எப்போதும் சிறந்தது.

3. செரிமானம்

செரிமானத்தை மேம்படுத்தவும், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தரவும், ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்தவும் முட்டை உதவும். வெறுமனே அவித்த முட்டையாக சாப்பிடாமல் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், முழு தானியங்கள் அல்லது பழங்களுடன் சேர்த்து உண்பது சிறந்தது.

4. பயன்படுத்தும் முறை

முட்டைகளை வாங்கி வந்து நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்தக்கூடாது. சரியான முறையில் சேமித்து வைக்காவிட்டால் பாக்டீரியா வளர்ச்சிக்கும் உணவு நஞ்சாதலுக்கும் வழிவகுக்கும். அதனை தடுக்க குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கலாம்.

5. சுத்தம் செய்தல்

முட்டையை வேகவைப்பதற்கு முன்பு நீரில் நன்கு கழுவ வேண்டும். அது போல், வேகவைத்த பிறகு முட்டையை உடைத்த பிறகும் நீரில் நன்றாக கழுவ வேண்டும். இது, முட்டையை உடைக்கும்போது சால்மோனெல்லா பாக்டீரியா உள்ளே நுழையும் அபாயத்தை குறைக்க உதவும்.

செய்யக்கூடாதவை

முட்டையை பச்சையாகவோ அல்லது சரியாக வேகவைக்கப்படாத நிலையிலோ சாப்பிட வேண்டாம். பச்சை முட்டைகளில் சால்மோனெல்லா பாக்டீரியா இருக்கலாம். எப்போதும் முட்டைகளை நன்கு வேகவைத்தே சாப்பிட வேண்டும்.

அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், முட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. உடலில் அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் (எல்.டி.எல்) உள்ளவர்கள் வாரத்திற்கு 3 முதல் 4 முட்டைகளுக்கு மேல் சாப்பிட விரும்பினால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடுவது பாதுகாப்பான தேர்வாகும்.

புரதச்சத்து உணவுகள்

முட்டை புரதச்சத்து கொண்டது என்பதற்காக உடலுக்கு தேவையான புரதச்சத்திற்கு முட்டையை மட்டுமே சார்ந்திருக்க தேவையில்லை. வேறு வகையான அமினோ அமிலங்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை கொண்ட சமச்சீர் உணவை உட்கொள்வதே சரியானதாகும். முட்டையுடன் பருப்பு, தானிய வகைகள், நட்ஸ், பால் பொருட்கள் போன்ற பல்வேறு புரதச்சத்து மிகுந்த உணவுகளையும் சேர்த்து உட்கொள்ளலாம்.

முட்டை சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை
அவித்த முட்டை மற்றும் ஆம்லெட்

அதிக அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட முட்டைப் பொரியல், முட்டை வறுவல் போன்றவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. அவை, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் நிறைந்த உணவாக மாற்றிவிடக்கூடும். உப்பு மற்றும் வெண்ணெய்க்குப் பதிலாக, மூலிகை, வாசனைப் பொருட்களை சுவைக்காக சேர்க்கலாம்.

கெட்டுப்போன முட்டையால் பாதிப்பு

துர்நாற்றம் வீசும் அல்லது வித்தியாசமாக தோற்றமளிக்கும் முட்டைகளை சாப்பிடக்கூடாது. முட்டையை சமைப்பதற்கு முன் அதன் வாசனையை நுகர்ந்து பார்க்கவேண்டும். கெட்டுப்போன முட்டையை சாப்பிடுவது செரிமான மண்டலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதே சிறந்தது. வாழ்க்கைமுறை, கடின உழைப்பு மற்றும் உடல்நிலையைப் பொறுத்து இரண்டு முட்டைகள் வரை சாப்பிடலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com