உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி.. செய்யக்கூடாத 6 தவறுகள்

மென்மையான, மெதுவான நடைப்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு 3 முதல் 5 நிமிடங்கள் 'வார்ம்-அப்' பயிற்சிகளை செய்வது தசைகளை தயார்படுத்தும்.
உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி செய்பவர்கள் தவிர்க்க வேண்டிய 6 விஷயங்கள்
நடைப்பயிற்சி
Published on

உடல் எடையை குறைக்கும் நோக்கத்தோடு நடைப்பயிற்சி செய்பவர்கள் கீழ்க்கண்ட 6 விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

1. மெதுவாக நடத்தல்

சாதாரண வேகத்தில் இயல்பாக நடப்பது கால்களுக்கு இதமளிக்கலாம். ஆனால் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரிக்க அத்தகைய நடைப்பயிற்சி உதவாது. உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் சுறுசுறுப்புடன் நடக்க வேண்டும். மெதுவாக நடந்தால் குறைவான கலோரிகளையே எரிக்க முடியும். கொழுப்பு எரிக்கப்படாது.

2. வார்ம்-அப் தவிர்த்தல்

'வார்ம்-அப்' செய்யாமல் திடீரென நடைப்பயிற்சியைத் தொடங்குவது, 'கூல்-டவுன்' செய்யாமல் திடீரென நடைப்பயிற்சியை முடிப்பது தசை இறுக்கம் அல்லது சோர்வுக்கு வழிவகுக்கும். எனவே மென்மையான, மெதுவான நடைப்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு 3 முதல் 5 நிமிடங்கள் 'வார்ம்-அப்' பயிற்சிகளை செய்வது தசைகளை தயார்படுத்தும். அதேபோல் நடைப்பயிற்சியை முடிக்கும்போது நடையின் வேகத்தைக் குறைத்து, கெண்டைக்கால், தொடையின் பின்பகுதி மற்றும் இடுப்புகளுக்கு இதமளிக்கும் ‘ஸ்டேடிக் ஸ்ட்ரெட்ச்' போன்ற எளிய பயிற்சிகளை செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். இந்த சில நிமிட பயிற்சிகள் தசை வலியை தடுக்கவும், தசையின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவிடும்.

3. தவறான உடல் தோரணை

உடலை நிமிர்த்தாமல் கூன் போட்டு நடந்தாலோ, கைப்பேசியை பார்த்தபடியே நடைப்பயிற்சி செய்தாலோ, அல்லது கால்களை தரையில் இழுத்து வைத்தபடி நடந்தாலோ எந்த பயனுமில்லை. இந்த தவறான உடல் தோரணை உடலில் ஆக்சிஜன் ஓட்டத்தைக் குறைத்து, கழுத்து மற்றும் முதுகில் அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். கலோரி எரிப்பையும் கட்டுப்படுத்திவிடும். தலையை நிமிர்த்து வைத்து, தோள்களை தளர்த்தி, உடலின் மையப்பகுதியை இறுக்கி, கைகளை இயல்பாக பக்கவாட்டில் ஆட்டியபடி நடப்பதே சரியான நடைப்பயிற்சி முறையாகும்.

4. தவறான காலணிகளை அணிதல்

பழைய ஸ்னீக்கர்கள், செருப்புகள் அல்லது பொருத்தமற்ற காலணிகளைப் பயன்படுத்துவது மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி, பாத வலி அல்லது முழங்கால் பிரச்சினைகளை உண்டாக்கும். மேலும் அத்தகைய காலணிகளை கொண்டு அதிக தூரம் நடக்க முடியாது. தொடர்ந்து நடைப்பயிற்சிக்கு செல்லும் ஆர்வத்தையும் குறைத்துவிடும். கால்களுக்கு உகந்த, மென்மைத்தன்மை கொண்ட காலணிகளை (ஷூ) அணிவது நல்லது. சரியான காலணிகள் கால்களில் காயம், பிடிப்பு ஏற்படுவதை தடுக்கும்.

5. ஒரே பாதையை தேர்வு செய்தல்

தினமும் ஒரே பாதையில் ஒரே வேகத்தில் நடந்தால், உடல் அதற்குப் பழகி குறைவான கலோரிகளையே எரிக்க செய்யும். அதனால் உடல் எடை குறைவதில் தொய்வு உண்டாகும். எனவே வெவ்வேறு பாதைகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது. மேடான, தாழ்வான இடங்களிலும் நடந்து பழகவேண்டும். நடையின் வேகத்தை மாற்றவேண்டும். நடக்கும் தூரத்தை படிப்படியாக அதிகரிக்கவேண்டும். உடற்பயிற்சி செயலியை பயன்படுத்தி தினமும் நடக்கும் அளவை கண்காணிக்கலாம்.

6. நீரேற்றம் இல்லாமல் இருத்தல்

லேசான நடைப்பயிற்சிகூட வியர்வை மூலம் உடலில் திரவ இழப்பை ஏற்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். தேவையற்ற பசியை தூண்டக்கூடும். எனவே, நடப்பதற்கு 20 முதல் 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதும், நடந்து முடித்த பிறகும் சிறிதளவு தண்ணீர் பருகுவதும் உடல் சோர்வடையாமல் ஆற்றலுடன் இருக்க உதவிடும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com