நீரிழிவு நோயாளிகள் தினமும் இன்சுலின் செலுத்துவது அவசியமா?

நீரிழிவு நோயை எந்த வகையான மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியாது, ஆனால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என்பது வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கிறது. சிலருக்கு பாதிப்பு அதிகமாகும்போது, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க படாதபாடு படவேண்டியிருக்கும். டைப் 1 நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து இன்சுலின் ஊசி செலுத்த வேண்டியிருக்கும். இதனால் வாழ்க்கையே வெறுத்துவிடும். நீரிழிவு நோய் எப்போது குணமாகும்? இன்சுலினில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? வாழ்நாள் முழுவதும் இதே நிலைதானா? என்ற விரக்தி ஏற்படும்.
Type 1 Diabetes (டைப் 1 நீரிழிவு நோய் ) ஒரு Autoimmune (தன்னியக்க நோய் எதிர்ப்பு நிலை) குறைபாடு ஆகும். டைப் 1 டையாபடீஸ் பாதிப்பு ஏற்பட்டால் தினமும் இன்சுலின் ஊசி செலுத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
மேலும் நீரிழிவு நோயை எந்த வகையான மருத்துவத்தாலும் நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மட்டுமே நாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். சிலருக்கு உடல் எடை குறைந்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், மூன்று மாத ரத்த சர்க்கரையின் சராசரி (HbA1C)பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.
இன்சுலின் செலுத்துவது உடலுக்கு நல்லது அல்ல என்றும், அதை செலுத்தவேண்டாம் என சிலர் குழப்பிவிடுவார்கள். ஆனால் இன்சுலின் நம் உடலுக்கு மிகவும் நல்லது. இன்சுலின் ஊசி செலுத்திக்கொள்ளும் போது உடல் திசுக்கள் ரத்தத்திலிருந்து குளுக்கோசை உறிஞ்சி கல்லீரலில் உற்பத்தியாகும் குளுக்கோசை குறைக்கிறது. இன்சுலின் செலுத்திக்கொள்வதால் Hb1Ac (மூன்று மாத சர்க்கரையின் அளவு சராசரியை) கட்டுப்பாட்டுக்குள் வைத்துகொள்ள உதவுகிறது. மேலும் நமது உடலில் புரதத்தை சேமித்து வைத்திருக்கும் தசைகளும், கொழுப்பும் கரையாமல் இருப்பதற்கு இன்சுலின் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இன்சுலின் செலுத்திக்கொள்வதால் நீரிழிவு நோயால் ஏற்படும் பக்கவிளைவுகளான விழித்திரை பாதிப்பு (Diabetic Retinopathy), நரம்பு பாதிப்பு ( Diabetic Neuropathy), சிறுநீரக பாதிப்பு (Diabetic Nephropathy), இருதய நோய் பாதிப்பு ( Cardiovascular disease) ஆகியவை குறைவதாக நீரிழிவு நோயின் முக்கிய ஆராய்ச்சிகளாக கருதப்படும் UKPDS மற்றும் DCCTயில் கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் நீரிழிவு நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று இன்சுலினை தொடர்ந்து செலுத்திக்கொள்ளலாம்.






