

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் விஷயத்தில் பலரும் அலட்சியமாக இருக்கிறார்கள். குறிப்பிட்ட வயதுக்குள் சீரான இடைவெளியில் தடுப்பூசி போட்டு வருவது பாதுகாப்பானது.
தடுப்பூசி போடுவதன் மூலம் உயிருக்கு ஆபத்தான பல நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம். தடுப்பூசிகளின் உதவியுடன் தடுக்கக்கூடிய முக்கியமான சில நோய்களை பற்றிய பட்டியல் இதோ..
போலியோ
இது ஒரு தொற்று நோயாகும். கடந்த காலங்களில் நிறைய பேர் போலியோ பாதிப்புக்கு ஆளானார்கள். எனவேதான் சிறு வயதிலேயே போலியோ தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து 1-2 வாரங்களுக்குள் மற்றவர்களுக்கு வேகமாக பரவும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் இயல்பாக நடமாட முடியாத சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும். உடலில் ஊனம் ஏற்படலாம். கைகளை நன்றாக கழுவ வேண்டும். இல்லாவிட்டால் அதன் மூலம் பரவி உணவு மற்றும் தண்ணீரை மாசுபடுத்தும். பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். குழந்தை பருவத்திலேயே போலியோ தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் தொடக்க நிலையில் இருந்தே போலியோ பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
டெட்டனஸ்
இது தொற்று நோய் அல்ல. ஆனால் அது உடலில் விஷம் போல் செயல்படும் என்பதால், ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக தசைகளில் கடும் வலியை ஏற்படுத்தும். உயிருக்கு ஆபத்தையும் உண்டாக்கும். மண்ணில் காணப்படும் பாக்டீரியாக்கள் மூலம் இது பரவக்கூடும். உடலில் ஏதேனும் வெட்டு காயம் அல்லது புண் ஏற்படும்போது, அதன் மூலம் பரவி உடலுக்குள் செல்லும் வாய்ப்புகள் அதிகம். தசைப்பிடிப்பு, பக்கவாதம் மற்றும் சில சுவாச பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும். விலங்குகள் கடித்த காயம் மூலமும் டெட்டனஸ் நோய் பாதிப்பு ஏற்படக்கூடும். டெட்டனஸ் தடுப்பூசி குழந்தைகளை வலி மிகுந்த நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும், எனவே ஏதேனும் காயம் ஏற்பட்டால் கண்டிப்பாக டெட்டனஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இன்ப்ளூயன்ஸா காய்ச்சல்
இது நுரையீரல், தொண்டை மற்றும் மூக்கு போன்ற பகுதிகளில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும். குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும். ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் எந்த நேரத்திலும் இந்த காய்ச்சல் வரலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் வராமல் தடுக்க, சிறு வயதிலேயே இந்த காய்ச்சல் தடுப்பூசியை போட்டுக்கொள்வது முக்கியமானது. இது பிற நோய்த்தொற்றுகள் வருவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. சில துளிகள் உமிழ்நீர் மூலமும் பரவக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஹெபடைடிஸ் பி
இது கல்லீரலை பாதிக்கும் நோய்த்தொற்றாகும். ஹெபடைடிஸ் பி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கல்லீரல் புற்றுநோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள். ஹெபடைடிஸ் பி-க்கான தடுப்பூசிகள் இந்த கடுமையான தொற்றுநோயை கட்டுப்படுத்தக்கூடியவை. மேலும் கல்லீரல் நோயின் தன்மை மேலும் தீவிரமடைவதை தடுக்கக்கூடியவை. புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கக்கூடியவை.
தட்டம்மை
இதுவும் ஒரு வகை தொற்று நோயாகும். சுவாச மண்டலத்தை கடுமையாக பாதிக்கும். காய்ச்சல் மற்றும் சொறி பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தக்கூடும். காது கேளாமை மற்றும் நிமோனியாவுக்கும் வழிவகுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் தட்டம்மை தடுப்பூசியை செலுத்திக்கொள்வது அவசியமானதாகும்.
சின்னம்மை
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் ‘சிக்கன் பாக்ஸ்’ எனப்படும் சின்னம்மை நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இது உடல் முழுவதும் கொப்புளங்களாக பரவி அரிப்புக்கு வழிவகுக்கும். காய்ச்சலையும் உண்டாக்கும். குழந்தைகள்தான் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள். பெரியவர்களை பொறுத்தவரை அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்துவிடும். இந்த நோயும் இருமல் அல்லது தும்மல் மூலம் எளிதில் பரவும். பாதிக்கப்பட்டவர்களின் உடலில் படர்ந்திருக்கும் கொப்புளங்களை தொடுவதாலும் இது பரவலாம். எனவே சின்னம்மை நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி போடுவதுதான் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
ஹெபடைடிஸ் ஏ
இதுவும் ஒருவகை வைரஸ் தாக்குதலால் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோயாகும். இந்த நோய் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளிடத்தில் அறிகுறிகள் வெளிப்படாது. அவர்கள் தடுப்பூசி போடாத பட்சத்தில் மற்றவர்களுக்கு எளிதில் பரப்பிவிடக்கூடும். பொதுவாக பெற்றோர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்தான் எளிதில் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் பெரியவர்களாக வளரும்போது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
டிப்தீரியா
இதுவும் ஒரு வகை தொற்று நோயாகும். டிப்தீரியா இதயத்தை கடுமையாக பாதிக்கலாம். அசாதாரணமான சூழலில் இதய செயலிழப்புக்கும் வழிவகுக்கும். இந்த நோய் தற்காலிக அல்லது நிரந்தர பக்கவாதத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது. எனவே டிப்தீரியாவுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் பிற உடல்நலப் பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள முடியும்.