

கோடை காலத்தில் தாகம் தணிக்கும் பழங்கள், காய்கறிகளின் பட்டியலில் வெள்ளரிக்காய்க்கு எப்போதுமே மவுசு உண்டு. வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரும் காய் மட்டுமல்ல, உடலுக்கு நன்மை அளிக்கும் ஏராளமான சத்துக்களையும் கொண்டிருக்கிறது.
வெள்ளரிக்காயில் கிட்டத்தட்ட 95 சதவீதம் நீர்ச்சத்து இருப்பதால் இயற்கையாகவே உடலை நீரேற்றத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும். செரிமானம், ரத்த ஓட்டம், உடல் வெப்பநிலைமை கட்டுப்படுத்துவதற்கும், உடல் ஊட்டச்சத்துக்களை விரைவாக உறிஞ்சுவதற்கும் துணைபுரியும். வெப்பமான நாட்களிலோ அல்லது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்கும்போதோ வெள்ளரிக்காய் உட்கொள்வது நீரேற்ற அளவை கட்டுக்குள் வைத்திருக்க சிறந்த வழியாகும்.
வெள்ளரிக்காயில் இருக்கும் வைட்டமின் கே, உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கும், எலும்புகளை பராமரிப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கப் நறுக்கிய வெள்ளரிக்காய் தினசரி வைட்டமின் கே தேவையில் சுமார் 20 சதவீதத்தை பூர்த்தி செய்துவிடும். மூட்டுகள் மற்றும் இணைப்புத்திசுக்களை ஆதரிக்கும் சிலிக்கா என்னும் நுண்ணிய தாதுக்களையும் கொண்டிருப்பதால் வயதானவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவது அவசியமானது.
செரிமானத்திற்கு உதவிடும் சிறந்த நண்பனாக வெள்ளரிக்காய் விளங்கும். அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுத்து, கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவிடும். அதாவது வெள்ளரிக்காயில் இருக்கும் அதிக நீர்ச்சத்தானது உடலில் இருக்கும் கழிவுகளை மென்மையாக்கி செரிமானத்தை எளிதாக்கும்.
எப்போதும் பசியாக உணராமல், கலோரி அளவை குறைவாக வைத்திருக்க முயற்சிப்போருக்கு வெள்ளரிக்காய் சிறந்த தீர்வாக அமையும். அதிலிருக்கும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து காரணமாக நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தரும்.
வெள்ளரிக்காயில் உள்ள பொட்டாசியம், உடலில் சோடியம் அளவை சமநிலைப்படுத்த உதவும், ரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் சேர்மங்கள் உள்ளது. இதய நோய்க்கு வித்திடும் ஆபத்துக் காரணிகளான கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் அழற்சியை குறைக்க இவை உதவக்கூடும்.
அழகு நிலையங்களில் வெள்ளரிக்காய் துண்டுகள் பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம், அதில் இருக்கும் அதிக நீர்ச்சத்து சருமத்தை ஈரப்பதமாக்குவதுதான். அதே நேரத்தில் சிலிக்கா, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை மென்மையாக்குகிறது. மேலும் வெள்ளரிக்காயில் காணப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமம் வயதாவதைத் தடுக்கவும், சூரிய ஒளி மற்றும் மாசுபாட்டினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.
வெள்ளரிக்காயில் இயற்கையாகவே கார்போஹைட்ரேட் மற்றும் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையை நிர்வகிப்பதற்கு சிறந்த தேர்வாக அமையும்.
மூட்டு வலி முதல் இதய நோய் வரை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு நாள்பட்ட அழற்சியே மூல காரணமாகும். வெள்ளரிக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த உதவிடும். அதனை தவறாமல் சாப்பிடுவது வீக்கத்தை குறைக்கவும், உள் எரிச்சலைத் தணிக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவும்.