

உடலின் மிக முக்கியமான உறுப்பான இதயத்தை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம். அவற்றில் புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பது மிகச் சிறந்த ஒன்றாகும். உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் மனநலம் சார்ந்த பிற வாழ்க்கை முறை மாற்றங்களும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதில், இதய ஆரோக்கியத்திற்கான உணவுமுறை மாற்றங்களை பார்ப்போம்.
தொப்பையில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற ரத்தக் கொழுப்பு அளவுகளுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி இதழில் வெளியான ஒரு ஆய்வு சொல்கிறது. இடுப்பைச் சுற்றி அதிகப்படியான கொழுப்பு சேர்ந்தால், வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. குறைவான கலோரிகளை உட்கொள்வதும், உணவு அளவுகளைக் கவனமாகக் கவனித்து உண்பதும், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவானது, குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அல்லது "கெட்ட கொழுப்பின்" அளவைக் குறைக்க உதவும். பீன்ஸ், ஓட்ஸ், பார்லி, ஆப்பிள்கள், பேரிக்காய்கள் மற்றும் அவகேடோ ஆகியவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து நிறைந்த கீரை மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஒரு நாளின் முதல் உணவு மிகவும் முக்கியமானது என்பதால் காலை உணவுக்கு நேரம் ஒதுக்குவது முக்கியம். தினமும் சத்தான காலை உணவை உண்பது, ஆரோக்கியமான உணவு மற்றும் எடையைப் பராமரிக்க உதவும். ஓட்ஸ், முழு தானியங்கள் அல்லது முழு கோதுமை டோஸ்ட் போன்ற முழு தானியங்கள், சிறிதளவு நட்ஸ், அல்லது வேர்க்கடலை வெண்ணெய் போன்ற கொழுப்பற்ற புரதங்கள் உள்ள உணவுகளை சாப்பிடலாம்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை உட்கொள்வது இதய நோயைத் தடுக்கவும் உதவும். சால்மன், சூரை, மத்தி மற்றும் ஹெர்ரிங் போன்ற பல மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அசைவ பிரியர்கள் வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது மீன் சாப்பிடுவது நல்லது.
பாதாம், வால்நட், பெக்கான் மற்றும் பிற மரங்களில் விளையும் நட்ஸ் வகைகளில் இதய ஆரோக்கியத்திற்கு உகந்த கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ளன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்க உதவும். அதே சமயம், இவற்றைச் சிறிய அளவிலேயே உட்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் அறிவுறுத்துகிறது. நட்ஸ் வகைகளில் ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அவற்றில் கலோரிகளும் அதிகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உப்பின் அளவை குறைப்ப இதயத்திற்கு நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பின் அளவு குறிப்பாக அதிகமாக இருக்கும். எனவே, துரித உணவை அதிகம் உட்கொள்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவேண்டும். அதற்குப் பதிலாக, அவகேடோ (வெண்ணெய் பழம்), ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டை போன்ற ஆரோக்கியமான கொழுப்புள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
அமெரிக்க இதயச் சங்கம் வெளியிட்ட தகவலின்படி, தினமும் ஒன்று முதல் மூன்று கோப்பைகள் வரை தேநீர் அருந்துவது இதயப் பிரச்சனைகளுக்கான அபாயத்தைக் குறைக்க உதவக்கூடும். உதாரணமாக, இது நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பு ஏற்படும் விகிதங்களைக் குறைப்பதற்கு உதவுகிறது.
டார்க் சாக்லேட் சுவையானது மட்டுமல்ல, இதில் இதய ஆரோக்கியத்திற்கு உகந்த 'பிளாவனாய்டுகள்' (flavonoids) எனும் சத்துக்களும் உள்ளன. இந்தச் சத்துக்கள், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன என்று 'நியூட்ரியண்ட்ஸ்' (Nutrients) எனும் ஆய்விதழில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே, அளவோடு சாப்பிடும்போது, டார்க் சாக்லேட் உடலுக்கு நன்மை பயக்கும். அதிக இனிப்புள்ள மில்க் சாக்லேட் இதற்குப் பொருந்தாது.