

தாம்பத்தியத்தில் ஏற்படும் நாட்பட்ட குறைகளுக்காக தம்பதிகள் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்படைகிறார்கள். இப்பிரச்சினைகளுக்கு இலைகள், விதைகள், மூலிகைகள், தாதுக்கள், ஜீவப்பொருட்களில் கூறப்பட்டுள்ள ஏராளமான மருந்துகளை சித்தர்கள் அருளியுள்ளனர்.
ஆண்களுக்கான தாம்பத்திய பிரச்சினைகளுக்கு, சித்த மருத்துவ நூலான அகத்தியர் குணவாகடம் மற்றும் பதார்த்த குண சிந்தாமணி ஆகியவற்றில் மதனகாமப் பூ அல்லது மதனகாமேசுவரப் பூ எனப்படும் சைகஸ் மலர் பற்றி கூறப்பட்டுள்ளது.
"மதனகாமப் பூவதனால் வாதமொடு பித்தமறும் இதமாய் சுக்கிலமும் இறுகும்காண் - நிதமுமதைப் பக்குவமாய் உண்ணப் பசும்பொன் நிறமாகும் மிக்கபல முண்டாம் விளம்பு."
பொருள்: மதனகாமப்பூவினால் தாது விருத்தி உண்டாகும், இது உடலுக்கு சுகத்தை கொடுத்து சுக்கிலத்தை (விந்தணுக்களை) இறுகச் செய்து வீரியத்தை அதிகரிக்கும். உடல் பொலிவும் பலமும் தரும் இதனை தகுந்த பக்குவத்துடன் மருந்தாக தயாரித்து தொடர்ந்து உண்டு வந்தால் தங்கம் போல உடல் பொலிவு பெறும். உடலுக்கு மிகுந்த வலிமையும் உண்டாகும்.
அதுபோல முருங்கை பூ பற்றியும் அகத்தியர் குணவாகடம் நூலில் கூறப்பட்டுள்ளது. முருங்கைப் பூவை முறைப்படி சுத்தம் செய்து உண்டு வர, கண்களுக்குக் குளிர்ச்சி தரும், உடல் சூடு, பித்தம் தணியும், பசியைத் தூண்டும், உடல் ஊட்டம், தாது புஷ்டி, தாம்பத்திய பலத்தை உண்டாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதார்த்த குணசிந்தாமணி நூலில் தூதுளம் பூ (தூதுவளை பூ) பற்றிய பாடல் உள்ளது. அதில், இந்தப்பூவை முறைப்படி உண்டு வர ஆண்களுக்கு உடல் தாது பலம், வீரிய விருத்தியை அளிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களின் தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் குறைபாடுகள் என்பது; பாலியல் விருப்பம், உணர்வு குறைதல், உறவின்போது வலி, உச்சக்கட்ட இன்பத்தை அடைவதில் சிரமம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கியது ஆகும்.
மாதுளம்பழம், பீட்ரூட், தர்பூசணி, அவகாடோ, அத்திப் பழம், செவ்வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, நெல்லிக்காய், பாதாம், வால்நட், பிஸ்தா மற்றும் டார்க் சாக்லெட் வகைகள், மீன்களில் சால்மன், மத்தி, சூரை, கணவாய், இறால் வகைகள் மற்றும் முட்டை, கீரை வகைகளில் முருங்கைக்கீரை, பசலைக்கீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரை போன்றவற்றில் உள்ள போலேட், இரும்புச் சத்து மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உடற்பயிற்சிகளில், உட்கார்ந்து எழும் பயிற்சி (ஸ்குவாட்), இடுப்பை உயர்த்தும் ஹெகல் பயிற்சி போன்றவை பலன்தரும்.
சித்த மருத்துவம்: சதாவரி லேகியம், வெண்பூசணி லேகியம், கதலி லேகியம் போன்ற லேகியங்களில் ஏதாவது ஒன்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ளும்போது உடல் நலமும், மன நலமும், தாம்பத்திய பலமும் பெருகும்.
அரசு அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவரின் ஆலோசனையின்பேரில் சித்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப மருந்துகளின் செயல்பாடு அமையும் என்பதால் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. மேலும் ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு பிரச்சினை போன்றவை சுட்டுக்குள் இருப்பது அவசியம்.
-டாக்டர் ஒய்.ஆர்.மானெக்சா