

கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலம் பெல்டங்கா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், மர்மமான உடல்நலப் பாதிப்பு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவும் பகலும் குளத்திலேயே வாழ்ந்து வரும் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டங்கா பகுதியைச் சேர்ந்த சிறுவன் இக்பால் ஷேக் (வயது16). அந்த சிறுவனுக்கு தண்ணீரை விட்டு வெளியே வந்தால் உடல் முழுவதும் தாங்க முடியாத அளவுக்கு எரிச்சலும் வலியும் ஏற்பட்டன. இதனால், அந்த சிறுவன் பெரும்பாலான நேரத்தைக் குளத்து நீரிலேயே கழித்து வந்தான். சில சமயங்களில் தொடர்ந்து 4 முதல் 7 நாட்கள் வரை குளத்தை விட்டு வெளியே வராமல் நீரிலேயே மூழ்கியிருக்கிறான்.
இந்த விசித்திர நிலை காரணமாக சிறுவனால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. குளக்கரையில் நின்றபடி கிராம மக்கள் வழங்கும் அவல், பிஸ்கட் போன்ற தின்பண்டங்களைச் சாப்பிட்டே அவன் உயிர் பிழைத்து வருகிறான். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அவனது பெற்றோரால், பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை.
தன்னை ஒரு 'ஜின்' (மர்ம ஆவி) பிடித்துள்ளதாக சிறுவன் நம்பினாலும், இது 'எரித்ரோமெலால்ஜியா' போன்ற ஒரு அரிய நரம்பியல் கோளாறாகவோ அல்லது தீவிர தோல் நோயாகவோ இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து தண்ணீரிலேயே இருப்பதால் சிறுவனின் கை, கால் தோல்கள் வெளுத்து, உரிந்து வருகின்றன. மேலும், தொடர் சளி, இருமல் போன்ற பிரச்சனையும் அவனுக்கு ஏற்பட்டன.
சூனிய சக்திதான் காரணம் என நம்பி உள்ளூர் மசூதிகள் மற்றும் மந்திரவாதிகளிடம் அழைத்துச் சென்றும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. எனவே, அரசு தலையிட்டு சிறுவனுக்குத் தகுந்த மனநல மற்றும் தோல் மருத்துவச் சிகிச்சைகளை இலவசமாக வழங்க வேண்டும் என அவனது பெற்றோரும் கிராம மக்களும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.