

சிப்ஸ், பிஸ்கெட், குளிர்பானம் போன்றவற்றை வாங்கும்போது, அதில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கிறதா என்பதை இனி எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் குழந்தைகளிடையே உடல் பருமன் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கவும், நுகர்வோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாக்கெட் உணவுகளில் "சிவப்பு எச்சரிக்கை லேபிள்" அச்சிடும் புதிய நடவடிக்கை பரவலாக ஆலோசிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
உணவுப் பொருட்களின் பாக்கெட் முன்பக்கத்தில் சிவப்பு நிற எச்சரிக்கை குறியீட்டை கொண்டுவர இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஐ.) முன்மொழிந்துள்ளது. அதன்படி, உணவுப் பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சர்க்கரை, உப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருந்தால், 'அதிக சர்க்கரை', 'அதிக உப்பு', 'அதிக கொழுப்பு' என சிவப்பு நிற அறுகோண வடிவில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும்.
ஒரு சத்து மட்டுமே வரம்பைத் தாண்டினால் அந்த சத்தின் பெயரும், இரண்டு அல்லது மூன்று சத்துக்கள் வரம்பைத் தாண்டினால் அவை அனைத்தும் ஒரே Hexagon-க்குள் குறிப்பிடப்படும். அதிக இனிப்புள்ள பானங்களுக்கும் எச்சரிக்கை வழங்கப்படும்.
நெய், சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை, வெல்லம், தேன் போன்ற ஒற்றை உட்பொருளைக் கொண்ட அடிப்படை உணவுப் பொருட்களுக்கு இதில் விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை திட்டத்தை இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், சர்க்கரை, உப்பு அல்லது கொழுப்பு ஆகியவற்றில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவை அதிக அளவில் உள்ள தயாரிப்புகளுக்கு இந்த விதிமுறை பொருந்தும். இரண்டாம் கட்டத்தில், இந்த உட்பொருட்களில் ஏதேனும் ஒன்று மட்டும் அதிக அளவில் இருந்தாலும், அந்தத் தயாரிப்புகளுக்கும் இந்த விதிமுறை விரிவுபடுத்தப்படும்.
இது நடைமுறைக்கு வந்தால், பாக்கெட்டின் பின்புறத்தில் உள்ள சிறிய எழுத்துகளை தேடாமல், முன்பக்கத்தை பார்த்தே உணவில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அதிகம் சேர்க்கப்பட்டிருக்கிறதா? என்பதை அறிந்து வாங்க முடியும்.
குறிப்பாக குழந்தைகளுக்கான உணவுகளை தேர்வு செய்யும் பெற்றோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும். சிப்ஸ், பிஸ்கெட், குளிர்பானம் போன்றவற்றை வாங்கும்போது, அதில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கிறதா என்பதை இனி எளிதாக தெரிந்துகொள்ளலாம்.