

தாம்பத்ய குறைபாடு, ஆண்களின் விறைப்புத்தன்மை குறைபாட்டை, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சித்த மருந்துகள் மற்றும் உணவு முறைகளால் சரி செய்யலாம்.
பசி, தாகம், ஓய்வு, தூக்கம் போன்று தாம்பத்திய வாழ்வும், உடலோடும், உள்ளத்தோடும் தொடர்புடைய ஒன்றாகும். இது கணவன், மனைவி உறவை பிணைக்கக் கூடிய முக்கியமான ஒன்று. இதில் குறைபாடு ஏற்பட்டால் மன ரீதியாக பாதிப்புக்குள்ளாகி, தொடர்ந்து உடலிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு என்பது நரம்பு, ஹார்மோன், உடல் நலன் மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டது. தாம்பத்தியத்தில் ஏற்படும் நாட்பட்ட குறைகளுக்காக ஆண்கள் உளவியல் ரீதியாக மனதளவில், உடலளவில் பாதிப்படைகிறார்கள்.
இந்த தாம்பத்ய குறைபாடு பிரச்சினை நீங்குவதற்கு, தாதுக்களை பலப்படுத்தும் உணவுகளை உட்கொள்வதுடன், உரிய சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ளவேண்டும்.
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மூலிகைகளில், நெருஞ்சில், இந்தியன் ஜின்செங் என்றழைக்கப்படும் அமுக்கராக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, பால் மிதப்பன் கிழங்கு, வாலுழுவை, பூமிசர்க்கரைக் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, மதனகாமப் பூ, குங்குமப் பூ, பூனைக்காலி விதை, சாலாமிசிரி, சாரப்பருப்பு, இவை நரம்புக்கு நல்ல வலுவைத் தந்து தாம்பத்யத்தில் திருப்தியைத் தரும்.
* சித்த செய் மருந்துகளில் அமுக்கரா சூரணம் -1 கிராம், பூரண சந்திரோதயம் -100 மிகி, நாகப் பற்பம் -100 மிகி, முத்து பற்பம் -100 மிகி இவைகளை பால் அல்லது தேனில் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
* சாலாமிசிரி லேகியம் -1 கிராம் வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.
வைட்டமின்களில் பி3,பி9,சி,டி,ஈ இவைகளில் குறைபாடு இருந்தாலும் தாம்பத்ய குறைபாடுகள் ஏற்படலாம், ஆகவே இந்த உயிர்ச்சத்துக்கள் குறைவில்லாமல் பார்க்க வேண்டும். தாதுக்களில் மக்னீசியம், துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்த உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவு வகைகளில் மாப்பிள்ளை சம்பா அரிசி, கறுப்புக் கவுனி அரிசி, உளுந்து, வெந்தயம், புடலங்காய், கருப்பட்டி, பாதாம், முந்திரிபருப்பு, கேரட், பீட்ரூட், அறுகீரை, பசலைக்கீரை, பேரிச்சம் பழம், மாதுளம்பழம், வாழைப்பழம், வேர்க்கடலை, முட்டை, நாட்டுக்கோழி, கடல் உணவுகள் இவைகள் விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்கும் நல்ல உணவுகள் ஆகும்.
உடற் பயிற்சிகளில் சைக்கிளிங் தான் முதலிடம், நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இடுப்பு தசைகள் மற்றும், ஆசன பகுதி தசைகளான இஸ்கியோகவர்னோசஸ், பல்போகவர்னோசஸ் தசைகளுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைப்பதால் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு சைக்கிள் ஓட்டுதல் நல்ல பலனைத் தரும்.
ஹெகல் பயிற்சி (Hegel Exercise): இது மிகவும் சிறப்பு வாய்ந்த பயிற்சி. இடுப்பின் இரு பக்கமும் கைகளை வைத்து உட்கார்ந்து எழும்புதல், இதை பத்து முறை செய்யலாம். மல்லாந்து படுத்து ஒவ்வொரு கால்களையும் வயிறு வரை மடக்கி பயிற்சி செய்வது, இதையும் பத்து முறை செய்ய வேண்டும். அடுத்து படுத்தபடியே இரு கால்களையும் முடிந்த வரை மேலே தூக்குவது, இவ்வாறு பத்து முறை செய்ய வேண்டும், இதனால் ஆண்குறிக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இடுப்பு தசைகள் உறுதியடையும், மற்றும் புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கம் குறைந்து நன்றாக சிறுநீர் கழியும்.
குறிப்பாக, மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மைகள் நீங்க தம்பதியர் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேச வேண்டும். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை, மனக் கவலைகள் நீங்க, இறை பிரார்த்தனைகள், தியானங்கள் செய்யலாம். மனம் உண்டென்றால் வழியுண்டு, ஆகவே மனதையும், உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்தால் எதுவும் சாத்தியமே.
-டாக்டர் ஒய்.ஆர்.மானெக் ஷா