தலையில் தோன்றும் சிறிய கட்டிகளால் அவதியா..? இந்த மூலிகைகள் இருக்க கவலை வேண்டாம்

சிறிதளவு வேப்ப எண்ணெய்யில் மஞ்சள் கலந்து கட்டி மீது தடவினால் தொற்று கட்டுப்படும்.
தலையில் தோன்றும் சிறிய கட்டிகளால் அவதியா..? இந்த மூலிகைகள் இருக்க கவலை வேண்டாம்
Published on

தலை சருமத்தில் எண்ணெய் சுரப்பிகள் அடைத்தல், கிருமித்தொற்று, அதிக வியர்வை, சுத்தமின்மை, உடல் சூடு போன்ற காரணங்களால் சிறுசிறு கட்டிகள் உருவாகின்றன. இந்த கட்டிகள் தோன்றுவதை, இயற்கை மூலிகைப் பொருட்கள் மூலமாக தடுக்கலாம். மேலும் தலை சருமத்தை எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் பராமரிக்கலாம்.

வேப்பிலை நீர்

10 முதல் 15 வேப்பிலைகளை நீரில் கொதிக்கவிடவும். பின்பு அந்த தண்ணீரை குளிர வைத்து விட்டு, அந்த தண்ணீரால் தலையை கழுவி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்வது, தலையில் படிந்திருக்கும் கிருமிகளை அழித்து மீண்டும் கட்டி உருவாகாமல் தடுக்க உதவும்.

கற்றாழை-மஞ்சள்

ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லில் ஒரு டீஸ்பூன் அளவில் மஞ்சள் தூள் கலந்து தலையில் கட்டி இருக்கும் இடத்தில் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும். இவ்வாறு தினமும் ஒரு முறை செய்தால் ஒரு வாரத்திற்குள் நல்ல பலன் கிடைக்கும். கட்டிகளின் வீக்கம் குறையாமல் இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும்.

உணவு முறைகள்

தலைமுடி பராமரிப்புடன் சேர்த்து உடல் சூட்டை குறைக்கும் உணவுகளை உட்கொள்வது அவசியமானது. கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் குறிப்பாக நெல்லிக்காய், கொய்யா, ஆரஞ்சு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தயிர் மற்றும் மோர் உடல் சூட்டை குறைப்பதற்கு உதவும். தினமும் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

வேப்ப எண்ணெய் - மஞ்சள்

சிறிதளவு வேப்ப எண்ணெய்யில் மஞ்சள் கலந்து கட்டி மீது தடவினால் தொற்று கட்டுப்படும். இந்த மூலிகை முறையை பின்பற்றுவது முடிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கட்டிகளுக்கும் நிவாரணம் தேடித்தரும்.

தினசரி தலை பராமரிப்பு

தலையில் கட்டிகள் உருவாவதை தடுக்க தலைமுடியை சுத்தமாக பராமரிப்பது முக்கியமானது. வாரத்திற்கு 2 அல்லது 3 முறை மென்மையான ஷாம்பூ அல்லது சீயக்காய் பொடி பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம். தலையில் அதிக எண்ணெய் படிவதற்கு அனுமதிக்கக்கூடாது. தேங்காய் எண்ணெய்யுடன் இரண்டு துளி வேப்ப எண்ணெய் கலந்து தலைமுடியில் தடவினால் சிறந்த பலன் கிடைக்கும். தலையில் வியர்வை வழிந்தால் உடனே துடைத்து உலர வைத்துக் கொள்ள வேண்டும்.

ஈரமான தலை, கிருமிகள் வளர சிறந்த சூழலை ஏற்படுத்திக்கொடுத்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

எண்ணெய்யில் பொரித்த உணவுகள், ஜங் புட்ஸ் எனப்படும் துரித உணவுகள், அதிக இனிப்புகள், குளிர்பானங்கள் போன்றவை உடல் சூட்டை அதிகரித்து கட்டிகள் உருவாக காரணமாகின்றன. எனவே இவற்றை உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com