இளம் வயது பெண்களே.. உடலில் இந்த மாற்றங்கள் ஏற்படுகிறதா...? அலட்சியம் வேண்டாம்

மாதவிடாயின்போது அதிகமாக ரத்தப்போக்கு ஏற்படுவது உடலில் உள்ள இரும்புச்சத்து படிப்படியாக குறைவதற்கு வழிவகுக்கக்கூடும்.
பெண்கள் மருத்துவம், மருத்துவ ஆலோசனைகள்
பெண்கள் ஆரோக்கியம்
Published on: 

பெண்கள் பலரும் 20 வயது முதல் 30 வயது வரையிலான காலகட்டங்களில் படிப்பு, வேலை, திருமணம், குடும்பம், குழந்தைகள், எதிர்கால திட்டங்கள் என பிஸியாக இருப்பார்கள். தங்களுடைய உடல்நலத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட 'வேலைப்பளுவோ, சோர்வோ காரணமாக இருக்கலாம்' என்று நினைத்து சாதாரணமாக கடந்து சென்று விடுவார்கள். அப்படி அலட்சியமாக இருக்காமல் இந்த வயதிலேயே உடல்நலத்தை பற்றி கவனம் செலுத்த தொடங்குவது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல உடல் நலப்பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.

1. கருப்பை வாய்ப்புற்றுநோய் பரிசோதனை

எச்.பி.வி. எனப்படும் சில வகை பாப்பிலோமா வைரஸ் தொற்றுகள் கருப்பை வாயில் புற்றுநோய்க்கு முன்பாக உடல் செல்களில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமலேயே இந்த மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதனை கண்டறிய வயதுக்கேற்ப கருப்பை வாய் பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது. எச்.பி.வி. போன்ற பரிசோதனைகளை எந்த வயதில், எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்ய வேண்டும் என்பது உடல்நிலையை பொறுத்து மாறுபடும்.

2. மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள்

மார்பகத்தில் புதிதாக கட்டி தோன்றுதல், ரத்தம் கலந்த திரவம் வெளியேறுதல் போன்ற மாற்றங்களை அலட்சியம் செய்யக்கூடாது. வலி இல்லாத கட்டியாக இருந்தாலும் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியமானது. மார்பகத்தில் இயல்பாக இருக்கும் தோற்றம் மற்றும் உணர்வை அறிந்திருப்பது முக்கியம். புதிய மாற்றம் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

3. ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தத்தை 'அமைதியான உயிர்க்கொல்லி நோய்' என்று கூறுவதற்கு காரணம், பலருக்கு எந்த அறிகுறியும் இல்லாமலேயே இருக்கக்கூடும். நீண்டகாலமாக கட்டுப்பாடின்றி இருக்கும் உயர் ரத்த அழுத்தமானது இதயம், மூளை, சிறுநீரகங்கள் மற்றும் ரத்த நாளங்களை பாதிக்கக்கூடும். எனவே வழக்கமான மருத்துவ பரிசோதனைகளின்போது ரத்த அழுத்தத்தை சரிபார்ப்பது நல்லது.

4. மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்

மாதவிடாய் தொடர்ந்து ஒழுங்கற்றதாக இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. 21 நாட்களுக்கு குறைவாகவோ, 35 நாட்களுக்கும் அதிகமாகவோ இடைவெளி ஏற்படுவது, ஆண்டுக்கு எட்டு முறைக்கும் குறைவாக மாதவிடாய் வருவது, சுமார் 90 நாட்கள் மாதவிடாய் இல்லாமல் இருப்பது போன்றவை ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வித்திடக்கூடும். இதனுடன் முகப்பரு, உடலில் அதிகப்படியான முடிவளர்ச்சி போன்றவை இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.

5. இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள்

மாதவிடாயின்போது அதிகமாக ரத்தப்போக்கு ஏற்படுவது உடலில் உள்ள இரும்புச்சத்து படிப்படியாக குறைவதற்கு வழிவகுக்கக்கூடும். முக்கியமாக ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்து ரத்தசோகை, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றலாம். எனவே சி.பி.சி. ரத்த பரிசோதனை மூலம் ரத்தசோகை உள்ளதா என்பதை கண்டறிவது அவசியமானது. மேலும் பெரிட்டின் பரிசோதனை உடலில் சேமிக்கப்பட்டுள்ள இரும்புச்சத்தின் அளவை மதிப்பிட உதவும்.

6. மனநலம்

உடல்நலம் மட்டுமல்ல மனநலமும் சீராக இருக்க வேண்டியது அவசியமானது. தொடர்ந்து கவலைப்படுவது, காரணமில்லாமல் பதற்றம் அடைவது. மனச்சோர்வு, எரிச்சல், தூக்கமின்மை, உணவு பழக்கத்தில் மாற்றம், மற்றவர்களிடம் இருந்து விலகி இருத்தல், தற்கொலை சிந்தனை, கவனம் செலுத்த முடியாமை என தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் நிலை ஏற்பட்டால் மனநல நிபுணரின் உதவியை நாடுவது நல்லது.

பெண்கள் மருத்துவம், மருத்துவ ஆலோசனைகள்
பெண்கள் ஆரோக்கியம்

7. ரத்தத்தில் சர்க்கரை அளவு

சிலருக்கு டைப் 2 டயாபட்டீஸ் எந்த அறிகுறியும் இல்லாமல் மெதுவாக உருவாகலாம். அதிக உடல் எடை, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்.), உயர் ரத்த அழுத்தம், குடும்பத்தில் ஏற்கனவே சிலருக்கு நீரிழிவு நோய் இருத்தல் போன்ற காரணிகள் இருந்தால் ரத்த சர்க்கரை பரிசோதனை மேற்கொள்வது நல்லது. வயது. அறிகுறிகள், கர்ப்பம், உடல் எடை, குடும்ப பின்னணியை பொறுத்து மருத்துவரின் ஆலோசனையின்பேரில் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com