இல்லத்தரசிகளின் இனிய பொழுதுபோக்கு "ரூஃப் கார்டன்"

மாடியில் காலியாக உள்ள இடங்கள், படிக்கட்டுகள், மாடிச்சுவர்கள் மற்றும் தொங்கும் தொட்டிகள் என்ற வெவ்வேறு நிலைகளில் ரூப் கார்டனை அமைத்துக்கொள்ளலாம்.
இல்லத்தரசிகளின் இனிய பொழுதுபோக்கு "ரூஃப் கார்டன்"
Published on

இல்லத்தரசிகள் பலருக்கும் தங்கள் வீட்டு மேல் மாடியில் தோட்டம் அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அவர்களுக்கு உள்ள ஒரு சந்தேகம் நிறைய இடம் அதற்காக தேவைப்படுமே என்பது தான். ஆனால், சிறிய இடமாக இருந்தாலும் போதும் என்று தோட்டக்கலை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரூப் கார்டன் என்ற மாடித்தோட்டம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூடுதல் தகவல் மற்றும் செடி, கொடி மற்றும் அதற்கான தொட்டி அல்லது மண் நிரப்பிய பைகள் ஆகியவற்றை பெற அவர்களது ஏரியாவில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை அணுகலாம்.

மாடியில் காலியாக உள்ள இடங்கள், படிக்கட்டுகள், மாடிச்சுவர்கள் மற்றும் தொங்கும் தொட்டிகள் என்ற வெவ்வேறு நிலைகளில் ரூப் கார்டனை அமைத்துக்கொள்ளலாம். அதிக வெயில் படும்படியான இடத்தை தேர்வு செய்து, அங்கே பச்சை வலை குடில் அமைத்தும் தோட்டம் அமைக்கலாம்.

மாடியின் தளம் தண்ணீரால் பாதிக்கப்படாமல் இருக்க கீழே பாலித்தீன் விரிப்பு போட்டு அதன்மீது தொட்டிகளை வைக்கலாம். இடம் குறைவாக இருந்தால், பி.வி.சி பைப்புகள், மரப்பலகை பெட்டிகள் போன்றவற்றிலும் செடிகள் வளர்க்கலாம்.

தொட்டியில் செடிகளை நடுவதற்கு முன்னர், அதற்கான மண்ணில் மக்கக்கூடிய பொருள்களான, காய்ந்த இலை, சமையலறை கழிவுகள், காகிதங்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை கலந்து 15 நாட்கள் வரை மூடி வைக்க வேண்டும். பின்னர், 15 நாட்கள் கழித்து அந்த மண்ணை தொட்டியில் நிரப்பி செடிகளை நடலாம். அல்லது விதைகளை விதைக்கலாம். செடிகளை தொட்டியில் அதிக ஆழத்தில் நடக்கூடாது.

காய்கறி விதைகளை நட்டு, வளர்ப்பதற்கு பைகள் அல்லது தொட்டிகளை அல்லது பிளாஸ்டிக், மண் பானை, உலோக பாத்திரங்கள் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். செடிகள் வளர்ப்பதற்காகப் பைகளில் உரம் கலந்த மண்ணை பையின் நீளத்திற்கு ஒரு அங்குல அளவு குறைவாகப் போட வேண்டும். மாடித்தோட்டத்துக்கு உபயோகப்படுத்தும் உரங்கள் உயிரி உரங்களாகவும், இயற்கை உரங்களாகவும் இருப்பது நல்லது.

பிளாஸ்டிக் பைகள், மண் தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள் போன்ற தொட்டிகளில் செம்மண், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்கள், வேப்பம் புண்ணாக்கு, ஆகியவற்றை கலந்து அடியுரமாக போடலாம். தொட்டிகளில் கீழ்ப்பகுதியில் தென்னை நார் அமைத்தால் மண்ணின் ஈரப்பதம் உலர்ந்து விடாமல் செடிகள் பாதுகாப்பாக இருக்கும். செடிகளுக்கு காலை அல்லது மாலை ஆகிய இரு நேரங்களில் தண்ணீர் ஊற்றலாம். வெயில் கொளுத்தும் பகல் நேரத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவத்தை தவிர்ப்பது நல்லது.

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது தொட்டியில் தேவையான அளவு தண்ணீர் மட்டுமே ஊற்ற விடும். அதிகமான ஈரப்பதம் என்பது செடியின் வேர்ப்பகுதியை அழுகச்செய்து விடக்கூடும். அதனால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்ற வேண்டும். பலரும் ரூப் கார்டன் முறையில் சொட்டு நீர்ப்பாசனத்தை பயன்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

ரூப் கார்டனை கச்சிதமாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் செடிகளில் பூஞ்சை நோய்களின் தாக்குதல்கள் ஏற்படக்கூடும். எனவே, வாரத்தில் ஒரு முறை செடிகளை முறையாக பராமரிக்க வேண்டும். வாரத்தில் ஒரு முறை செடிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு கரைசல் அல்லது இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்து செடிகளின் மீது தெளித்து, பூஞ்சை நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியும்.

செடிகளின் தன்மைக்கு ஏற்ப அவற்றை சரியான தட்பவெப்ப நிலை உள்ள பகுதிகளில் வைக்க வேண்டியது மிகவும் அவசியம். சில செடிகள் வறட்சியை தாங்கி வளரும். சில தாவரங்கள் குறைந்த வெப்பத்தில் வளரக்கூடியதாக இருக்கும். அவற்றின் அடிப்படையில் செடிகளை சரியான இடத்தில் வைக்க வேண்டும்.

வெயில் காலத்தில் ரூப் கார்டன் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். காய்கறி தோட்டம் அமைக்க நிழலான பகுதியை தேர்வு செய்யக் கூடாது. சூரிய வெப்பம் படியக்கூடிய பகுதியாக இருக்க வேண்டும். விதைகள் நடப்பட்ட பைகளை நேரடியாக மேல் தளத்தில் வைக்கக் கூடாது. மேலும், அவற்றை நெருக்கமாகவும் வைக்கக் கூடாது.

ரூப் கார்டன் காரணமாக வெயில் காலங்களில் வீடுகளுக்குள் குளிர்ச்சியான சூழல் ஏற்படும். இல்லத்தரசிகளுக்கு என்பது பயன் அளிக்கும் விதத்திலான பொழுதுபோக்கு என்றும் அதை சொல்லலாம். மேலும், மட்கும் குப்பைகளான பழக்கழிவுகள், காய்கறி தோல்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை வெளியில் போட்டு விடாமல் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். தோட்ட பராமரிப்பு காரணமாக மனதில் புத்துணர்வும் ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com