கணவன்-மனைவியை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோபி அருகே கணவன்-மனைவியை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கணவன்-மனைவியை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை
Published on

மாடுவிற்ற பணம்

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள கணக்கம்பாளையம் சின்னகாளியூர் ஆனைமலை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டவர் என்கிற சென்னிமலை (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி கண்ணாயாள் என்கிற ரங்கம்மாள் (55). இவர்கள் 2 பேரும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கள்ளிப்பட்டியில் உள்ள கடைக்கு ஆண்டவர் அடிக்கடி செல்வது வழக்கம்.

அந்த கடையை கடம்பூர் அருகே உள்ள காடகநல்லி பகுதியை சேர்ந்த பாலுவின் மகன் விஜயன் என்கிற புட்டுசாமி (33) நடத்தி வந்தார். அவரிடம் ஆண்டவர் நன்றாக பழகி வந்தார். கடந்த 26-11-2012 அன்று கடைக்கு சென்ற ஆண்டவர், தன்னிடம் மாடு விற்ற பணம் ரூ.30 ஆயிரம் இருப்பதாக விஜயனிடம் கூறினார். பின்னர் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு சென்றார்.

கணவன் -மனைவி கொலை

அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு ஆண்டவரும் அவருடைய மனைவி கண்ணாயாளும் தோட்டத்து வீட்டின் முன்பு கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது விஜயன் மற்றும் 3 பேர் ஆண்டவரின் தோட்டத்துக் குள் நுழைந்தனர். அவர்கள், ஆண்டவர் வீட்டில் வைத்திருப்பதாக கூறிய ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சென்றனர்.

அப்போது கணவன் -மனைவி 2 பேரும் விழித்துக்கொண்டனர். இதனால் அந்த 4 பேரும் சேர்ந்து ஆண்டவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதை கண்ட கண்ணாயாள் அங்கிருந்து உயிர் பிழைக்க வீட்டுக்குள் ஓடினார். ஆனால் 4 பேர் கும்பல் அவரையும் கொலை செய்தது.

நகை -பணம் கொள்ளை

பின்னர் ஆண்டவர் அணிந்திருந்த பவுன் மோதிரம், அவரிடம் இருந்த ரூ.1,000-த்தையும் கொள்ளையடித்தனர். இதுபற்றி பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயன் என்கிற புட்டுசாமியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்த விவரம் வருமாறு:-

விஜயன் அந்தப்பகுதியில் சில திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். அதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் இருந்தபோது கோவை பேரூர் மாதம்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் என்கிற சரவணக்குமார் (24), கோவை சின்ன வேடம்பட்டி கோகுலம் வீதியை சேர்ந்த செல்வன் என்கிற செல்வராஜ் (30), கோபி கொண்டையம்பாளையம் பாவடி வீதியை சேர்ந்த கணேசன் (24) ஆகியோரிடம் பழக்கம் ஏற்பட்டது.

ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து ஆண்டவரையும், கண்ணாயாளையும் கொன்றுவிட்டு, கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேற்கண்ட விவரங்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

ஆயுள் தண்டனை

இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.திருநாவுக்கரசு நேற்று தீர்ப்பு கூறினார். அதில் கொள்ளை மற்றும் கொலைக் காக திட்டமிட்டது, அத்துமீறி நுழைந்தது, இரட்டைக்கொலை செய்தது ஆகிய குற்றங்களுக்காக 4 பேருக்கும் தலா 4 ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோல் தங்க நகை, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடித்துச்சென்ற குற்றத்துக்காக 4 பேருக்கும் தலா 10 ஆண்டு ஜெயில் மற்றும் தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி அந்த உத்தரவில் கூறி இருந்தார். அதன்படி குற்றம்சாட்டப்பட்ட , விஜயன், சரவணன், செல்வராஜ், கணேசன் ஆகிய 4 பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி என்.திருநாவுக்கரசு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து 4 பேரும் கோவை மத்திய ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com