

தானே,
உல்லாஸ்நகரில் பங்களா வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர். இதற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழே குதித்த தம்பதி
தானே மாவட்டம் உல்லாஸ்நகர் அல்ஷேபாடா பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(வயது45). இவரது மனைவி ஊர்மிளா(44). இவர்கள் 2 மாடி கொண்ட பங்களா வீட்டில் வசித்து வந்தனர். ஊர்மிளா முன்னாள் எம்.எல்.ஏ. பப்புகலானியின் மனைவி ஜோதி கலானியின் உதவியாளராக இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் பங்களா வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஊர்மிளா திடீரென கீழே குதித்தார். இதனை கண்ட நந்தகுமாரும் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார். இருவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
போலீஸ் விசாரணை
இது பற்றி அறிந்த அப்பகுதியினர் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நந்தகுமார் உயிரிழந்தார். ஊர்மிளா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வீட்டில் நடத்திய சோதனையில் கடிதம் எதுவும் சிக்கவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.