

மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டது. இதனை நேற்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார் ஆகியோரிடம் கட்டிட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் 24 ஆயிரம் சதுர அடியில் கட்டிடங்கள் உள்ளன. இதில் 6 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவுள்ள கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பழமையான கட்டிடம் என்பதால் சிறிது உள்வாங்கியது. இதனால் ஜன்னல் கம்பிகள் வளைந்து டைல்ஸ் உடைந்துள்ளது. இந்த சம்பவத்தால் எந்தவித அசம்பாவிதமும் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு ஏற்படவில்லை.
நான் இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் தொலைபேசி மூலம் பேசினேன். அவரும் உடனடியாக முதல்அமைச்சர் உத்தரவின்படி பழுதான கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறையால் சாத்தியமில்லாமல் உள்ளது. இடையில் 2011ம் ஆண்டு மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது ஜூன் 6ந் தேதி தண்ணீர் திறந்து விட்டார். அதன்பிறகு அது சாத்தியமில்லாமல் உள்ளது.
காவிரி ஆணைய தீர்ப்பின்படி காவிரியில், கர்நாடக அரசு தண்ணீர் விடும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். கர்நாடக அரசு இந்த உத்தரவை நிறைவேற்றாவிட்டால் தமிழக அரசு காவிரி நதிநீர் ஆணையத்தில் கண்டிப்பாக மேல்முறையீடு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.