தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூடாவிட்டால் போராட்டம்

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை உடனடியாக மூடாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக சமூக அமைப்புகள் முடிவெடுத்துள்ளன.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூடாவிட்டால் போராட்டம்
Published on

புதுச்சேரி,

கலந்தாய்வு கூட்டம்

மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் சமூக அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன், திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன், துணைத்தலைவர் இளங்கோ, தமிழர் களம் செயலாளர் அழகர், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் சந்திரசேகரன் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

*இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வருகிற மார்ச் 31ந்தேதியில் இருந்து மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்று சுப்ரீம்கோர்ட்டில் மனு ஒன்று மதுக்கடை உரிமையாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மதுக்கடைகளை மூடுவதில் இருந்து புதுச்சேரிக்க விதிவிலக்கு அளிக்கவேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதுச்சேரி அரசு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் நிலையை மாற்றி மாவட்ட நெடுஞ்சாலைகளாக ஆக்கி மதுக்கடைகளை தொடர்ந்து நீடித்திட வழிவகை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முயற்சி வெளிப்படையாக மதுக்கடை உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகும். எனவே புதுச்சேரி அரசு மக்களின் நலனை கருத்தில்கொண்டு சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் உடனடியாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூடு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

*இதுகுறித்து கவர்னர், முதல்அமைச்சர், கலால்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், தலைமை செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு கூட்டாக மனு அளக்க உள்ளோம். அதன்பின்னரும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசை வலியுறுத்தும் வகையில் போராட்டம் நடத்துவோம்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com