

சென்னை,
சென்னை புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையை சேர்ந்தவர் சோமராமன்(வயது 63). இவர் தான் வசித்து வரும் வீட்டின் அருகில் ஒரு குடிசை போட்டு பழைய இருப்பு பொருட்கள் மற்றும் பழைய வாகனம் மற்றும் அதன் உதிரி பாகங்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் அந்த கடையில் திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்த அருகில் நின்றவர்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் எழும்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் மற்றும் திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையில் எழும்பூர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தீ விபத்து ஏற்பட்ட குடிசை அருகில் உள்ள கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து சோமராமனின் மனைவி ஜெயந்தி(50) மற்றும் அவரது மகன் முத்துமாலை(22) ஆகிய 2 பேரும் கீழே இறங்க முடியாமல் சிக்கி கொண்டிருப்பது தெரிய வந்தது. இதை பார்த்த தீயணைப்பு வீரர்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்து கயிறு மூலம் சோமராமனின் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று ஜெயந்தி மற்றும் முத்துமாலை ஆகிய 2 பேரையும் காப்பாற்றினர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.
பின்னர் சுமார் 1 மணி நேரமாக போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.