மத்தியில், பா.ஜனதா அரசை வீழ்த்த: காங்கிரஸ் தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும் - நிர்வாகிகள் கூட்டத்தில் சஞ்சய்தத் பேச்சு

‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசை வீழ்த்த காங்கிரஸ் தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும்’ என்று கோவையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சஞ்சய்தத் பேசினார்.
மத்தியில், பா.ஜனதா அரசை வீழ்த்த: காங்கிரஸ் தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும் - நிர்வாகிகள் கூட்டத்தில் சஞ்சய்தத் பேச்சு
Published on

கோவை,

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், வீடு தோறும் பிரசார இயக்கம் என்ற தலைப்பில் சிங்காநல்லூர் சர்க்கிள் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிங்காநல்லூர் ரங்கா மகாலில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அருள் பெத்தையா, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிங்காநல்லூர் சர்க்கிள் தலைவர் ஜனார்த்தனன் வரவேற்றார். இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான சஞ்சய்தத் கலந்துகொண்டு பேசியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி. வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவேன். இந்தியர்கள் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்துவேன். தேசிய நதிகளை இணைப்பேன் என மோடி கடந்த தேர்தலில் வாக்குறுதி அள்ளி வீசினார். ஆனால், அவற்றில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை.

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி என அடுத்தடுத்து சுமைகளை ஏற்றி, மக்களை கொடுமைப்படுத்தியது தான் மிச்சம். தொழிற்கூடங்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. வேலைவாய்ப்பு பறிபோய்விட்டது. உணவுப்பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. மக்களை காப்பதற்கு பதிலாக பிரதமர் மோடி, சில பணக்காரர்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடியையும், அவர் தலைமையிலான பா.ஜனதா அரசையும் வீழ்த்த காங்கிரஸ் தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும். இந்த தேர்தலை ஒரு யுத்த களம்போல் கருதி, அந்த அளவுக்கு வேகமாகவும், விவேகமாகவும் பணியாற்றி வெற்றி தேடி தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் எல்.முத்துக்குமார் நிர்வாகிகள் வீனஸ்மணி, கணபதி சிவக்குமார், மாநகர் பொருளாளர் சவுந்தரகுமார், வக்கீல் கருப்பசாமி, காந்தி, கருப்பசாமி, துளசிராஜ், கோட்டைசெல்லப்பா, காமராஜ்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com