

தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், உயிர்பலியும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த 58 வயது பெண், போடி புதூரை சேர்ந்த 60 வயது முதியவர், உத்தமபாளையத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்த 48 வயது பெண் ஆகிய 4 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
532 பேருக்கு ஆக்சிஜன் சுவாசம்
அதுபோல், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி கக்கன்ஜி காலனியை சேர்ந்த 13 வயது சிறுமி கொரோனா அறிகுறிகளுடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த சிறுமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவு வரும் முன்பே அவர் உயிர் பிரிந்து விட்டது.
இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 667 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 517 ஆக உயர்ந்தது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 442 பேர் நேற்று குணமாகினர். பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 776 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 532 பேர் மூச்சுத்திணறல் காரணமாக ஆக்சிஜன் சுவாசம் பெற்று வருகின்றனர். 68 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.