

பெரம்பூர்,
சென்னை வியாசர்பாடி, சர்மாநகர், எருக்கஞ்சேரி சாலையில் உள்ள கூட்டுறவு தொழிற்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான கம்பெனிகள், தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பிரவீன்(வயது 45) என்பவருக்கு சொந்தமான எவர் சில்வர் பாத்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் 2-வது மாடியில் இவரது தொழிற்சாலை அமைந்து உள்ளது. இங்கு எவர் சில்வர் பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, அட்டைப்பெட்டிகளில் அடுக்கி லாரிகள் மூலம் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
தீ விபத்து
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஊழியர்கள் அனைவரும் சென்று விட்டனர். பிரவீனும் தொழிற்சாலையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை பிரவீனின் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென 2-வது மாடி முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியில் புகை மூட்டமாக காட்சி அளித்தது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு அதிகாரி குணசேகரன் தலைமையில் 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தொழிற்சாலையில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பாத்திரங்கள் நாசம்
மேலும் கூடுதலாக 12 டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தொழிற்சாலையில் எரிந்த தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
தீ விபத்தில் விற்பனைக்கு தயார் நிலையில் அடுக்கி வைத்து இருந்த எவர் சில்வர் பாத்திரங்கள் மற்றும் அட்டை பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகின. மேலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து விட்டதால் முதல் தளம் மற்றும் தரை தளத்துக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
மின் கசிவு காரணமா?
இரவு நேரத்தில் ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இந்த கூட்டுறவு தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனிகளில் அடிக்கடி மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்படுவது வழக்கம்.
அதே போல் இந்த எவர் சில்வர் பாத்திர தொழிற்சாலையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் எம்.கே.பி.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.