

கோத்தகிரி
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு உடனடியாக விலக்கு அளிக்க வலியுறுத்தி கோத்தகிரியில் இந்திய மாணவர் சங்கத்தின் கோத்தகிரி தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்கத்தின் தாலுகா தலைவர் சுகுந்தன் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட அமைப்பாளர் யோகராஜ், தாலூக்கா செயலாளர் சச்சின் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட கூடலூரை சேர்ந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகவும், தமிழகத்தில் இருந்து நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கோத்தகிரி தாலூக்கா தலைவர் சுந்தர், ரஞ்சித், மாணவர் சங்க பொறுப்பாளர் குமரன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.