

மண்டியா,
காவிரியை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ரத யாத்திரை குழு நேற்று மண்டியாவுக்கு வந்தது. அங்குள்ள காவிரி தாய் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து ரத யாத்திரை குழுவினர் வழிபட்டனர்.
ரத யாத்திரை குழு
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பாகமண்டலாவில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிழகத்தில் பாய்ந்தோடி பூம்புகாரில் கடலில் கலக்கிறது.
இந்த நிலையில் கங்கையை புனிதமாக கருதி வழிபடுவது போல காவிரியையும் வணங்கி வழிபட வேண்டும், காவிரியை மாசுபடாமல் காப்பது நமது கடமை, காவிரியில் சாக்கடை கழிவுகள், ஆலைகளின் ரசாயன கழிவுகள் கலப்பதையும் தடுத்து பாதுகாக்க வேண்டும், மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க தடுப்பணைகளை கட்டி நீர்ஆதாரத்தை பெருக்க வேண்டும், நதிகளை தேசிய மயமாக்க வேண்டும், முதல்கட்டமாக தென்னக நதிகளை காவிரியுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகளாக கோவை அகில பாரத சன்னியாசி சங்கம், ஒகேனக்கல் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
மண்டியாவுக்கு வந்தது
இந்த ரத யாத்திரை வாகனத்தில் காவிரி தாய் சிலை வைக்கப்பட்டு உள்ளது. அந்த சிலையுடன் ரத யாத்திரை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேப் போல் இந்த ஆண்டும் காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை கடந்த 22-ந்தேதி குடகு மாவட்டம் பாகமண்டலாவில் உள்ள காவிரி ஆறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து தொடங்கப்பட்டது.
இந்த ரத யாத்திரை குழு நேற்று மண்டியாவுக்கு வந்தது. இந்த ரத யாத்திரை குழுவினருக்கு முன்னாள் மந்திரி எம்.எஸ்.ஆத்மானந்தா தலைமையிலான காவிரி பாதுகாப்பு குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிறப்பு பூஜை
பின்னர் மண்டியா கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவிரி வனப் பூங்காவில் உள்ள காவிரி தாய் சிலைக்கு ரத யாத்திரை குழுவினர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதில் ஆத்மானந்தா தலைமையிலான காவிரி பாதுகாப்பு குழுவினரும் கலந்துகொண்டனர். பின்னர் அந்த ரத யாத்திரை குழுவினர் மண்டியாவில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்த ரத யாத்திரை அடுத்த மாதம் (நவம்பர்) 13-ந்தேதி பூம்புகாரை சென்றடையும் என்று ரத யாத்திரை குழுவினர் தெரிவித்தனர்.