ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி கிருஷ்ணகிரியில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
Published on

கிருஷ்ணகிரி,

ஜல்லிக்கட்டு

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 700 பேர் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். மேலும் கல்லூரி எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பேராசிரியர்கள் உடனடியாக மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி கல்லூரிக்கு செல்லுமாறு கூறினார்கள். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கல்லூரிக்குள் சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து மாணவ, மாணவிகள் கூறியதாவது:- தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. இதை நடத்த விடாமல் பீட்டா போன்ற அமைப்புகள் எதிர்த்து வருகிறார்கள்.

அனுமதி மறுப்பு

இதனால் உச்சநீதிமன்றமும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்து வருகிறது. தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே மத்திய அரசு, பீட்டா அமைப்பு ஆகியவற்றை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி மாணவ, மாணவிகள் கோஷம் எழுப்பினார்கள்.

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் ஜல்லிக்கட்டுக்கு இருக்கும் தடையை நீக்க கோரி இன்று (வியாழக்கிழமை) ஊர்வலம் நடைபெற உள்ளது. இதில் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com