

பெங்களூரு,
கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தனித்து போட்டியிடும் என்றும், கட்சியின் புதிய மாநில தலைவராக எச்.விஸ்வநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தெரிவித்தார்.
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் கர்நாடக மாநில தலைவராக குமாரசாமி இருந்தார்.
நிர்வாகிகள் கூட்டம்
அவர் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசின் முதல்-மந்திரியாக இருக்கிறார். குமாரசாமி அரசின் நிர்வாக பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்படுவார் என்று அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா ஏற்கனவே கூறி இருந்தார்.
இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தலைமையில் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
எச்.விஸ்வநாத் ஒருமனதாக தேர்வு
இதில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் புதிய மாநில தலைவராக எச்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தேவேகவுடா, குமாரசாமி உள்பட நிர்வாகிகள் கட்சியின் கொடியை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். எச்.விஸ்வநாத் சட்டசபை தேர்தலுக்கு முன்பு தான் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்த கூட்டத்திற்கு பிறகு தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூருவில் இன்று (அதாவது நேற்று) ஜனதா தளம்(எஸ்) கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் புதிய மாநில தலைவராக எச்.விஸ்வநாத் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முதல்-மந்திரி குமாரசாமி கட்சி கொடியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சித்தராமையா துணை முதல்-மந்திரியாக இருந்தபோது, எம்.பி.பிரகாஷ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.
புதிய நிர்வாகிகள் நியமனம்
இப்போது குமாரசாமி முதல்-மந்திரியாக இருப்பதால் அவரால் 2 பதவிகளை நிர்வகிப்பது கடினம். அதனால் கட்சி பதவியை வேறு ஒருவருக்கு வழங்குமாறு குமாரசாமி கூறினார். இதனால் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்துள்ளோம். கட்சிக்கு அனைத்து நிலையிலும் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வோம். இதில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்குவோம்.
பிற்படுத்தப்பட்ட பிரிவினர், முஸ்லிம்கள், லிங்காயத் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் கட்சியில் பதவி வழங்குவோம். இந்த முறை இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்குவோம். அதே நேரத்தில் மூத்த தலைவர்களை புறக்கணிக்கமாட்டோம். அவர்களின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்வோம். இன்னும் 10 நாட்களில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமன பட்டியலை வெளியிடுவோம்.
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி
வருகிற 11-ந் தேதி முதல் நான் கர்நாடகத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன். உள்ளாட்சி தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) தனித்து போட்டியிடும். இதுபற்றி மாநில காங்கிரஸ் தலைவர் என்னை சந்தித்து பேசினார். அவரும் இதே கருத்தை என்னிடம் தெரிவித்தார். இது எங்களுக்கு புரிந்துள்ளது. நாங்கள் தனித்து போட்டியிடுவதால், காங் கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. கூட்டணிக்குள் விரிசல் ஏற்படாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம். காங்கிரசுடன் எங்களுக்கு எந்த சண்டையும் இல்லை.
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் எங்கள் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடத்தப்படும். வட கர்நாடக தனி மாநில விஷயத்தில் எடியூரப்பா என் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. நீர்ப்பாசனத்துறை மந்திரி, முதல்-மந்திரி, பிரதமர் பதவியில் பணியாற்றி உள்ளேன். நான் சாதியை அடிப்படையாக கொண்டு பணியாற்றியது இல்லை. இது எடியூரப்பாவுக்கு தெரியவில்லை.
கையேடு வெளியிட முடிவு
வட கர்நாடகத்திற்கு எந்தெந்த ஆட்சியில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து நாங்கள் ஒரு கையேட்டை வெளியிட முடிவு செய்துள்ளோம். அதன் மூலம் உண்மை நிலை மக்களுக்கு தெரியவரும்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்தது. இந்த நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை, தனித்து போட்டி என அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.