குளித்தலை அருகே வீட்டின் சுவர் இடிந்து தொழிலாளி பலி

குளித்தலை அருகே வீட்டின் சுவர் இடிந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுசம்பந்தமாக மேஸ்திரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர்
கரூர்
Published on

குளித்தலை,

வீட்டை இடிக்கும் பணி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மருதூர் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி பட்டு. இவரது மகன் பிரபாகரன். இவர் திருச்சி மத்திய சிறையில் சிறை காவலராக பணிபுரிந்து வருகிறார். புதிய கட்டுமான பணிக்காக இவர்களது வீட்டை இடிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

இந்தநிலையில் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுரேஷ் (46) என்பவரது மேற்பார்வையில், திருச்சி உறையூர் கொசவமேட்டு தெருவை சேர்ந்த தொழிலாளி அப்துல் ரகுமான் (26) கட்டிடங்களை இடிக்கும் கருவி (டிரில்லிங்) மூலம் வீட்டின் சுவரை துளையிட்டு இடிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார்.

சுவர் இடிந்து தொழிலாளி பலி

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வீட்டின் ஒரு பக்க சுவர் அப்துல் ரகுமான் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி அப்துல் ரகுமான் காயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அப்துல்ரகுமானை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

இந்த சம்பவம் குறித்து அப்துல்ரகுமானின் சகோதரர் அப்துல்சலாம் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கட்டிடத்தை இடிப்பதற்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுவரை இடித்தால் சுவர் மேலே விழுந்து காயம் ஏற்படும் என்று தெரிந்தும் அப்துல்ரகுமான் கட்டிடத்தை இடிக்க மேஸ்திரி சுரேஷ் அனுமதித்துள்ளதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com