

பொங்கல் பண்டிகை
தமிழகத்தில் சாதி, மதம், இன வேறுபாடு இன்றி கொண்டாடப்படும் பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை வருகிற 14ந் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
நாகர்கோவில் உள்ளிட்ட குமரி மாவட்ட சந்தைகள், நடைபாதை கடைகள், காய்கறி கடைகள் போன்றவற்றில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் குலை, கிழங்கு வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களின் விற்பனை சூடுபிடித்து வருகிறது.
மண் பானைபனை ஓலை
பொங்கல் பண்டிகையின்போது பெரும்பாலானோர் மண்ணால் செய்யப்பட்ட புது மண் அடுப்பு, புது மண்பானையில்தான் பொங்கலிடுவது வழக்கம். அதனால் இந்த பண்டிகையில் புது மண் அடுப்பு, மண்பானை, மண் சட்டி ஆகியவை முக்கிய இடம் வகிக்கும். இதனால் மண் அடுப்பு, மண்பானை, மண் சட்டி ஆகியவற்றின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் வடசேரி மீன் சந்தைப்பகுதி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் புதிய மண் அடுப்பு, மண் பானைகள், மண்சட்டிகள் பலவிதங்களில், பல வடிவங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் அளவு, வடிவங்களுக்கு தகுந்தாற்போல் விலை இருக்கிறது. குறைந்தது ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.150 வரை இந்த மண் அடுப்பு, மண் பானை, மண் சட்டிகள் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் பொங்கல் தயாரிப்பதற்கான அடுப்பில் தீ மூட்ட பெரும்பாலும் பனை ஓலைகள்தான் பயன்படுத்தப்படும். இதனால் குமரி மாவட்டத்தில் பனை ஓலைகளின் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது. நாகர்கோவில் வடசேரி பெரிய தெரு உள்ளிட்ட பல இடங்களில் பனை ஓலைகள் கட்டுக்கட்டாக குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை காண முடிகிறது. ஒரு கட்டு பனை ஓலை ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தலைப்பொங்கல் சீர்
புதிதாக திருமணம் ஆன புதுமண தம்பதிகள் கொண்டாடும் முதல் பொங்கல் அவர்களுக்கு தலைப்பொங்கல் ஆகும். எனவே தலைப்பொங்கல் கொண்டாடும் புதுமணத்தம்பதிகளுக்கு புத்தாடைகள், நகைகள், பொங்கல் சீர்வரிசைப் பொருட்கள் போன்றவற்றை பெண் வீட்டார் தரப்பில் கொடுப்பது ஆண்டாண்டு காலமாக வழக்கத்தில் இருந்து வரும் ஒன்று.
இதனால் தலைப்பொங்கல் கொண்டாட உள்ள புதுமணத் தம்பதிகளும் மகிழ்ச்சியோடு பொங்கலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொங்கல் சீர் வரிசைப் பொருட்களில் முக்கியமாக குத்துவிளக்கு1, செம்பு பானை1, உருண்டை பானை, நாழி உலக்கு, குத்துப்போணி, உருளி, கை மணி, பத்தி ஸ்டாண்ட், தூபக்கால், அன்னபூரணி மற்றும் சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவை இடம் பெறும். இதனால் பாத்திரக்கடைகளில் செம்பு, பித்தளை, சில்வர் பாத்திரங்கள், பித்தளை குத்துவிளக்குகள் வித, விதமாகவும், பல வடிவங்களிலும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை குடும்பம், குடும்பமாக சென்று கடைகளில் தேர்வு செய்து வருகிறார்கள். இவற்றின் விற்பனையும் கடைகளில் சூடுபிடித்துள்ளது. புதுமணத்தம்பதிகளுக்கு வழங்கப்படும் சீர்வரிசைப் பொருட்கள் அதாவது செம்பு, பித்தளை, சில்வர் பாத்திர வகைகள், குத்துவிளக்கு உள்ளிட்டவை அடங்கிய ஒரு செட் குறைந்தது ரூ.9 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை உள்ளது என பாத்திரக்கடை வியாபாரிகள் தெரிவித்தனர்.